
வாக்களிப்பது முதல் தினசரி கொடுப்பனவுகள் வரை - இடைநீக்கத்தினால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இழக்கப்போவது என்ன?
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் அவையின் செயல்பாட்டை தடுத்ததற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கடந்த இருதினங்களாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்திலிருந்து நேற்று மேலும் 49 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததை அடுத்து, லோக்சபா செயலகம், பல்வேறு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை கட்டுப்படுத்தும் கடுமையான நடவடிக்கைகளை அடிகோடிட்டு சுற்றறிக்கையை வெளியிட்டது.
இடைநீக்கத்தின் விளைவுகள் குறித்து சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்கு நாடாளுமன்ற அறை, லாபி மற்றும் கேலரிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
"அவர்கள் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடாளுமன்றக் குழுக்களின் அமர்வுகளில் இருந்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பெயரில் வணிகப் பட்டியலில் எந்த திட்டமும் சேர்க்கப்படவில்லை" என்று மக்களவை சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
card 2
இடை நீக்கத்தால் அவர்கள் இழக்கப்போகும் சலுகைகள் என்ன?
"அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட எந்த அறிவிப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் நடத்தப்படும் குழுக்களுக்கான தேர்தல்களில் அவர்களால் வாக்களிக்க முடியாது," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
இடைநிறுத்தப்பட்ட எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் நிதி சலுகைகள் குறித்தும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், "எஞ்சிய அமர்வுக்கு அவையின் நாடாளுமன்ற சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டால், இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு வழங்கப்படும் தினசரி கொடுப்பனவுக்கு(daily allowance) அவர்களுக்கு உரிமை இல்லை."
முன்னெப்போதும் இல்லாத வகையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலிருந்தும் கூட்டாக 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
லோக்சபாவில் இருந்து 95 பேரையும், ராஜ்யசபாவில் இருந்து 46 பேரையும் குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய பகுதி வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
card 3
எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறல் நடந்ததையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும், பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அதனை தொடர்ந்தே அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த இடைநீக்கத்திற்கு எதிராக டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.
"எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தவறு. நாங்கள் இதை எதிர்த்துப் போராடுவோம்; இது தவறு.. இதை எதிர்த்துப் போராட நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக டிசம்பர் 22 அன்று அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்று கார்கே செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.