கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தன்னுடைய 92வது வயதில் இன்று காலமானார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், கர்நாடக முதல்வருமான சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா (SM கிருஷ்ணா) 2009 முதல் 2012 வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், இன்று அதிகாலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மாநில மற்றும் மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் கிருஷ்ணாவின் சேவை ஈடு இணையற்றது. IT-BT துறையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கர்நாடகா எப்போதும் அவருக்குக் கடன்பட்டிருக்கும். குறிப்பாக முதலமைச்சராக." என பதிவிட்டார்.
Twitter Post
SM கிருஷ்ணாவின் ஆட்சியில் வளர்ச்சி கண்ட பெங்களூரு
SM கிருஷ்ணா 1999 முதல் 2004 வரை கர்நாடகாவின் முதலமைச்சராக பணியாற்றினார். அவரது ஆட்சிக்காலத்தின் போது பெங்களூருவை நாட்டின் தொழில்நுட்ப மையமாக மாற்றிய பெருமைக்குரியவர். இந்த நகரத்திற்கு "இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு" என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்த பெருமையும் அவரையே சேரும். கர்நாடகாவின் முதலமைச்சராக தனது பங்கிற்கு கூடுதலாக, கிருஷ்ணா தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்தார். 2009 முதல் 2012 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும், 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிரா ஆளுநராகவும் பணியாற்றினார். 2023 ஆம் ஆண்டில், இந்திய அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணா 2023 ஜனவரியில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.