ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை அந்த நாடு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தார், ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, கடந்த மே 10ஆம் தேதி அதிகாலையில் இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் நூர் கான் விமானப்படைத் தளத்தைத் தாக்கியதை உறுதிப்படுத்தினார். இதில் ராணுவ உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததோடு, அங்கிருந்த வீரர்கள் காயமடைந்ததையும் அவர் ஏற்றுக்கொண்டார். இந்தியா சுமார் 80 ட்ரோன்களை அனுப்பியதாகவும், அதில் 79 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும், ஒரே ஒரு ட்ரோன் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
தாக்குதல்
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்
ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியது. வழக்கமாக இந்தியத் தாக்குதல்களை மறைக்கும் அல்லது குறைத்து மதிப்பிடும் பாகிஸ்தான், தற்போது சேதங்களை ஒப்புக்கொண்டிருப்பது அந்த நாட்டுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளக்கம்
இந்திய ராணுவத் தரப்பின் விளக்கம்
பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்குப் பதிலளித்த இந்திய முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான், இஷாக் தார் ஒரு பொய்யர் என்று கடுமையாகச் சாடினார். அவரது கூற்றின்படி, பாகிஸ்தான் 138 வீரர்களுக்கு மரணத்திற்குப் பின் உயரிய விருதுகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் குறைந்தது 400 முதல் 500 வீரர்கள் வரை இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். நூர் கான் தளம் தீப்பிடித்து எரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலும், பாகிஸ்தானின் 11 விமானப்படைத் தளங்கள் இந்தியாவின் தாக்குதலால் பலத்த சேதமடைந்தன என்று அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் இந்த ஒப்புதல், இந்தியாவின் பாதுகாப்புத் திறனையும், அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் உறுதியையும் உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.