மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது
பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நூற்றாண்டை முன்னிட்டு, மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து, ஜனாதிபதி மாளிகை நேற்று இரவு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பீகாரின் சமஸ்திபூரில் பிறந்த தாக்கூர் இரண்டு முறை பீகாரின் முதல்வராக பதவி வகித்துள்ளார். 'ஜன்நாயக்' என்று பிரபலமாக குறிக்கப்பட்ட தாக்கூர், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக போராடியவர். 1978 நவம்பரில், இவர் முன்னெடுப்பில் தான், பீகாரில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அரசுப் பணிகளில் 26 சதவீத இடஒதுக்கீடு என்ற நடைமுறை வந்தது. 1952ஆம் ஆண்டு முதல், எந்தத் தேர்தலிலும் தோல்வியே சந்திக்காத பீகாரின் பெருந்தலைவராக இருந்தவர் தாக்கூர்.