இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்; யார் இந்த வைஸ் அட்மிரல் ஆர்டி சரின்?
இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் (டிஜிஏஎஃப்எம்எஸ்) அடுத்த டைரக்டர் ஜெனரலாக அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர்டி சரின் செவ்வாயன்று (அக்டோபர் 1) நியமிக்கப்பட்டார். அவர் முப்படையின் ஒருங்கிணைந்த ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் அதிகாரி என்ற வரலாற்றைப் படைத்தார். இந்திய ஆயுதப்படையில் இதுவரை பணியாற்றிய மிக உயர்ந்த பெண் அதிகாரியும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் ராணுவத்தின் மருத்துவ சேவைகளின் டைரக்டர் ஜெனரலாக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த நியமனம் வந்துள்ளது. முன்னதாக, லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயரும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
வைஸ் அட்மிரல் ஆர்டி சரின் பின்னணி
1985 டிசம்பரில் இந்திய கடற்படையில் இணைந்த வைஸ் அட்மிரல் ஆர்டி சரின், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில் டிப்ளமேட் நேஷனல் போர்டு, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் இருந்து கதிரியக்க நோயறிதலில் எம்டி மற்றும் அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் காமா கத்தி அறுவை சிகிச்சை பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார். அவரது 38 ஆண்டுகால பணியில், அவர் பல முக்கிய பதவிகளை வகித்தார். சரின் 46வது டிஜிஏஎஃப்எம்எஸ் பொறுப்பை ஏற்கும் முன் இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படைக்கான டைரக்டர் ஜெனரலாகவும் பதவி வகித்துள்ளார்.
முப்படைகளிலும் பணியாற்றிய தனிச்சிறப்பு
இந்திய ராணுவத்தில் கேப்டனாக லெப்டினன்டாகவும், கடற்படையில் அறுவை சிகிச்சை நிபுணராக வைஸ் அட்மிரலாகவும், இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாகவும் பணியாற்றிய பெண் என்ற தனிச்சிறப்பு அவருக்கு உண்டு. ராணுவ மருத்துவர்கள் முப்படைகளிலும் வெவ்வேறு சேவைகளுக்கு மாற்றப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 2024இல், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவரது சிறந்த சேவையைப் பாராட்டி அதி விஷிஷ்ட் சேவா பதக்கத்தை வழங்கினார். சரின் இரண்டு ஆண்டுகளுக்கு ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக இருப்பார் மற்றும் ஆயுதப் படைகள் தொடர்பான ஒட்டுமொத்த மருத்துவக் கொள்கை விஷயங்களுக்கும் பொறுப்பாக இருப்பார்.