முதன்முறையாக 'தலைமை ஆசிரியர் வழிகாட்டி கையேடு' புத்தகத்தை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை
பள்ளி மாணவர்கள் கல்வித்திறன் மற்றும் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தல் உள்ளிட்டவைகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆசிரியர்களுக்கென, பல்வேறு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், இவ்வாறான முயற்சிகளில் ஒன்றாக முதன்முறையாக 300 பக்கங்கள் கொண்ட 'தலைமை ஆசிரியர் வழிகாட்டி கையேடு' என்னும் புத்தகத்தினை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் தலைமை ஆசிரியர்களின் பணிகள் என்ன? கணிதம், அறிவியல், வேதியியல், கணக்கியல், உயிரியல், இயற்பியல் உள்ளிட்ட ஒவ்வொரு பாடங்களையும் ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களுக்கு நன்கு புரியும் வகையில் நடத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம். மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், விளையாட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நெறிமுறைகளும் இதில் இடம்பெற்றுள்ளது.
போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்
மேலும், ஆசிரியர்கள் தங்களுக்கான ஆற்றல் திறனை எவ்வாறு ஒன்று திரட்டுவது, இவர்கள் பாடம் நடத்த எந்த யூடியூப் அல்லது செயலிகள் சிறந்தவை?ஒவ்வொரு மாதத்திலும் ஆசிரியர்கள் செய்யவேண்டிய பணிகள் என்னென்ன ?என அனைத்து விவரங்களும் இதில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, ஒவ்வொரு பாடத்தினையும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எப்படி எளிதாக கொண்டு சேர்ப்பது? என்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஓர் உதாரணமாக, ஒரு விலங்கியல் பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர் தனது மாணவர்களை ஓர் உயிரியல் பூங்காவிற்கு நேரில் அழைத்து சென்று கற்பித்தால், மாணவர்கள் அதனை மிகவும் சுலபமாக புரிந்துக்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.