விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: டெல்லியில் 144 தடை உத்தரவு
செய்தி முன்னோட்டம்
நாளை விவசாயிகள் அணிவகுப்பை முன்னிட்டு அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில், மார்ச் 12ஆம் தேதி வரை பெரிய கூட்டங்களுக்கு டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா பிறப்பித்த உத்தரவில், தேசிய தலைநகருக்குள் பேரணிகள் மற்றும் டிராக்டர்கள் நுழைவதற்கு தடை விதித்து, துப்பாக்கி மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்கள், செங்கல், கற்கள் போன்ற தற்காலிக ஆயுதங்கள், பெட்ரோல் கேன்கள் அல்லது சோடா பாட்டில்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பிப்ரவரி 13 அன்று டெல்லிக்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டம்
எதற்காக இந்த போராட்டம்?
பயிர்களுக்கு குறைந்த விலைக்கு உத்தரவாதம் அளிக்க சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை மத்திய அரசை ஏற்க வலியுறுத்தி பிப்ரவரி 13-ம் தேதி விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக செல்லவுள்ளனர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் 'டெல்லி சலோ' பேரணியில் பங்கேற்கும்.
விவசாயிகள் சங்கங்களின் 'டெல்லி சலோ' அணிவகுப்புக்கு முன்னதாக, ஹரியானா மற்றும் டெல்லியில் உள்ள காவல்துறை, அண்டை மாநிலங்களுடனான தங்கள் எல்லைகளை பாதுகாக்கும் வகையில் கான்கிரீட் தடுப்புகள், சாலை ஸ்பைக் தடுப்புகள் மற்றும் முள்வேலிகளை வைத்து, வாகனங்கள் நுழைவதைத் தடுக்கவும், தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஆயிரக்கணக்கான காவல்துறையினரை பாதுகாப்பிற்காக நிறுத்தியும் வைத்துள்ளனர்.