Loading...
பாஸ்போர்ட் விவரங்களில் முரண்பாடு: காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் சௌரவ் தாஸுக்கு எதிராக 'லுக்அவுட்' நோட்டீஸ் பிறப்பிப்பு
காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் சௌரவ் தாஸுக்கு எதிராக 'லுக்அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது

பாஸ்போர்ட் விவரங்களில் முரண்பாடு: காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் சௌரவ் தாஸுக்கு எதிராக 'லுக்அவுட்' நோட்டீஸ் பிறப்பிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
04:59 pm

செய்தி முன்னோட்டம்

காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் சௌரவ் தாஸின் பாஸ்போர்ட் விவரங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, அவருக்கு எதிராக மும்பை காவல்துறையின் கோரிக்கையின் பேரில் 'லுக்அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக செல்ல முயன்றபோது, டெல்லி விமான நிலையத்தில் குடியேற்றத் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்து சௌரவ் தாஸ் தாக்கல் செய்த மனுவின் விசாரணையின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முரண்பாடுகள்

இந்தியக் குடியுரிமை குறித்தே கேள்வி எழுப்பும் முரண்பாடுகள்

நீதிபதி அமித் மகாஜன் முன்பாக மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, சௌரவ் தாஸின் பாஸ்போர்ட் ஆவணங்களில் அவரது பள்ளிப் படிப்பு, முகவரி மற்றும் பெற்றோர் குறித்த விவரங்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தந்தையின் பெயரை தாஸ் குறிப்பிடாமல் விட்டதும், சில ஆவணங்களில் டெல்லி முகவரியும் வேறு சிலவற்றில் புதுச்சேரி முகவரியும் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இத்தகைய முரண்பாடுகள் அவரது இந்தியக் குடியுரிமை குறித்தே கேள்விகளை எழுப்புவதாக மத்திய அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

வாதம்

முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக வாதம்

விசாரணையின் போது சௌரவ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அகில் சிபல், லுக்அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது குறித்து தனது மனுதாரருக்கு முன்கூட்டியே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வாதிட்டார்.

டெல்லி விமான நிலையத்திற்குச் சென்ற பிறகே விளக்கம் கோரும் நோட்டீஸ் கிடைத்ததாகவும், எந்தக் குற்றத்திற்காக, எப்போது இந்தச் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தி அதன் நகலை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இதற்குப் பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, லுக்அவுட் சுற்றறிக்கையின் நகலை வழங்க முடியாது என்றும், தற்போது அதன் இருப்பை அறிந்துகொண்ட மனுதாரர் தனிப்பட்ட சட்ட நடவடிக்கை மூலம் அதனை எதிர்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

வழக்கு ஒத்திவைப்பு

டிசம்பர் 9-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

இதனிடையே, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் பிறந்த இடம் குறித்த முரண்பாடுகளுக்காக சௌரவ் தாஸுக்கு ஏழு நாட்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த டெல்லி உயர் நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ADVERTISEMENT