டெல்லியில் காற்றுமாசு தடுப்பு நடவடிக்கை: பார்க்கிங் கட்டணம் இருமடங்கு உயர்வு, 50% WFH அமல்
செய்தி முன்னோட்டம்
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் தீவிரமடையும் காற்று மாசுபாட்டை முன்கூட்டியே கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லி அரசு அதிரடி கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. வாகனப் புகையைக் குறைக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடுமையான கட்டுமானத் தடைகள் மற்றும் அலுவலக நேர மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
பொதுப் போக்குவரத்து
வாகனப் பயன்பாட்டைக் குறைக்க இருமடங்கு பார்க்கிங் கட்டணம்
சொந்த வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் பார்க்கிங் கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த உத்தரவு வரும் 2027 பிப்ரவரி 28 வரை அமலில் இருக்கும். அதேசமயம், மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தால் நிர்வகிக்கப்படும் வாகன நிறுத்துமிடங்களுக்கு இந்த கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து பணி
மாற்றி அமைக்கப்பட்ட அலுவலக நேரம்
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அலுவலக வேலை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும், டெல்லி அரசுத் தலைமைச் செயலகம் உள்ளிட்ட இதர துறைகள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலும் செயல்படும்.
நவம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்றும், எஞ்சிய 50 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
கட்டுமானப் பணிகளுக்குத் தடை
தூசி மாசுபாட்டைத் தடுக்கும் வகையில், வெளிப்புறக் கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டிட இடிப்பு நடவடிக்கைகளுக்கு நவம்பர் 1, 2026 முதல் ஜனவரி 31, 2027 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டிசம்பர் 10 முதல் ஜனவரி 20 வரை அனைத்துவிதமான கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கும் முழுமையான தடை அமலில் இருக்கும்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூய்மையான காற்றை உறுதி செய்வது குறிப்பிட்ட ஒரு பருவத்திற்கு மட்டும் உரியது அல்ல; ஆண்டு முழுவதும் தொடர்ந்து அறிவியல் பூர்வமான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.