Loading...
முரசு புயல்: ஆந்திராவுக்கு 500 மின்வாரிய ஊழியர்களை அனுப்பிய தமிழக அரசு
ஆந்திர மின் சீரமைப்புக்கு 500 தமிழக ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

முரசு புயல்: ஆந்திராவுக்கு 500 மின்வாரிய ஊழியர்களை அனுப்பிய தமிழக அரசு

எழுதியவர் Vasuki
Nov 02, 2026
05:49 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் தீவிரமடைந்துள்ள 'முரசு' புயல் பாதிப்புகள் மற்றும் மின்தடை சீரமைப்புப் பணிகளுக்காக தமிழகத்திலிருந்து முதற்கட்டமாக 500 மின்வாரியப் பணியாளர்கள் ஆந்திராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். முதல்வர் விஜய் உத்தரவுப்படி மனிதநேய அடிப்படையில் இந்நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளக் குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாகவும், ஒரு யூனிட் மின்சாரம் ₹41-க்கு கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் அடிப்படையற்ற தவறான வதந்தி என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

முதல்வர் விஜய் உத்தரவு

ஆந்திராவுக்கு மின்வாரிய உதவி

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், "முரசு புயல் காரணமாக ஏற்படக்கூடிய சேதங்களை எதிர்கொள்ள ஆந்திர மின்சார வாரியம் தமிழகத்தின் உதவியைக் கோரியிருந்தது."

"அண்டை மாநிலம் என்ற அடிப்படையிலும், மனிதநேய நோக்கிலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாகச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்."

"அதனடிப்படையில், தமிழகத்தில் வழக்கமான மின் விநியோகப் பணிகளுக்கோ அல்லது சீரமைப்பு நடவடிக்கைகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 மின்வாரிய ஊழியர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் ஆந்திராவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்" என்றார்.

மின் கொள்முதல் விளக்கம்

தமிழகத்தின் பருவமழை தயார்நிலை

தொடர்ந்து பேசிய அமைச்சர், "வடகிழக்கு பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளவும், தமிழகத்தில் மழையால் மின்கம்பங்கள் சேதமடைந்தால் உடனடியாகச் சீரமைக்கவும் போதிய உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் இங்கேயும் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

"மேலும், ஒரு யூனிட் மின்சாரம் ₹41-க்கு கொள்முதல் செய்யப்படுவதாகச் சில தரப்பில் திட்டமிட்டு முற்றிலும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன; அதில் எவ்வித உண்மையும் இல்லை" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT