புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு
மிக்ஜாம் புயல் தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதால், நேற்று மாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கி விமான சேவைகளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதாலும் மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர சென்னைக்கு வரும் 8 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக மும்பை, அபுதாபி, பஹ்ரைன், துபாய், கொழும்பு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து அந்த விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக 20 விமான சேவைகள் ரத்து
சென்னையில் வானிலை சீரானதும் அந்த விமானங்கள் சென்னைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து துபாய், ராஜமுந்திரி, விஜயவாடா, திருச்சி, கொச்சி ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 10 விமானங்களும், அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்களும் என மொத்தம் 20 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாய், லண்டன், சிங்கப்பூர், டெல்லி உள்பட 14 புறப்படும் விமானங்களும், 12 வருகை விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக வந்து சேரும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையிலும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
மழை இன்றும் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது
கொட்டித்தீர்க்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மழை இன்றும் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் சென்னைவாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையில் பெருங்குடியில் தான் அதிகபட்ச மழைப்பொழிவு(24 சென்டிமீட்டர்) பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை மீனம்பாக்கத்தில் 20 சென்டிமீட்டர் மழையும், வளசரவாக்கத்தில் 19 சென்டிமீட்டர் மழையும், அண்ணாநகரில் 18.3 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 18.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.