அர்னாப் புயல் கரையை கடந்தது, அடுத்ததாக அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: IMD
செய்தி முன்னோட்டம்
மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய அர்னாப் அதிதீவிரப் புயல் ஆந்திர மாநிலம் நரசாபுரம் அருகே வெற்றிகரமாக கரையை கடந்துள்ளது. இருப்பினும், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் விரைவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனக் கணித்துள்ளது.
அர்னாப் புயல்
ஆந்திராவில் கரையை கடந்த 'அர்னாப்' புயல்
புதன்கிழமை காலை ஆந்திராவின் கோதாவரி மாவட்டம் நரசாபுரத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அர்னாப் புயல் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்த போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்திலும், இடையிடையே 150 கி.மீ வேகம் வரையிலும் பலத்த காற்று வீசியது.
விசாகப்பட்டினம் வால்டேர் பகுதியில் அதிகபட்சமாக 21 செ.மீ மழை பதிவானது.
மேலும் கலிங்கப்பட்டினம், துனி, காக்கிநாடா மற்றும் மச்சிலிப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
ஸ்ரீகாக்குளம், விஜயநகரம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றினால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து சேதமடைந்துள்ளன.
தமிழகம்
தமிழகத்திற்கான மழை மற்றும் வெப்பநிலை எச்சரிக்கை
அக்டோபர் 30 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 3, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தின் ஏனைய இடங்கள் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 30 வரை தமிழகம் மற்றும் புதுவையில் இயல்புநிலையை விட 2 முதல் 3° செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.