WPL 2027 ஏலம்: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சோபி மோலினியூவை ₹1.10 கோடிக்கு வாங்கிய உ.பி. வாரியர்ஸ்
செய்தி முன்னோட்டம்
மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் இன்று புதன்கிழமை கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்து அணிகளிலும் காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்காக 150 வீராங்கனைகள் களமிறங்கியுள்ள இந்த ஏலத்தில், ஆஸ்திரேலிய நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சோபி மோலினியூவை வாங்குவதற்கு அணிகளுக்கு இடையே உச்சக்கட்டப் போட்டி நிலவியது. ரூ.50 லட்சம் அடிப்படை விலையுடன் களமிறங்கிய அவரை எடுக்க உ.பி வாரியர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கடுமையாக மோதின. இறுதியில் ரூ.1.05 கோடியைத் தாண்டி ரூ.1.10 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு சோபி மோலினியூவை உ.பி வாரியர்ஸ் அணி சொந்தமாக்கியது.
இந்திய பேட்டர் திஷா கசா
அணிகளின் முக்கியத் தேர்வுகள்
இன்றைய ஏலத்தில் முதல் வீராங்கனையாகக் களம் கண்ட இந்திய அதிரடி பேட்டர் கிரண் நவ்கிரேவின் அடிப்படை விலை ரூ.40 லட்சமாக இருந்த நிலையில், அவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து அசத்தியுள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விக்கெட் கீப்பர் ஜி. கமலினியை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி அவரது அடிப்படை விலையான ரூ.40 லட்சத்திற்குத் தட்டித் தூக்கியது.
மேலும், அயர்லாந்து ஆல்ரவுண்டர் ஓர்லா பிரெண்டர்காஸ்ட்டையும் குஜராத் ஜெயண்ட்ஸ் ரூ.30 லட்சத்திற்கு வாங்கியது.
இந்திய பேட்டர் திஷா கசாத்தை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.10 லட்சத்திற்கு தனது கூடாரத்திற்குள் கொண்டு வந்தது.
சினே ராணா
உ.பி வாரியர்ஸ் அணியில் இணைந்த கிரேஸ் ஹாரிஸ்
கடந்த சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக விளங்கிய ஆஸ்திரேலியாவின் அதிரடி வீராங்கனை கிரேஸ் ஹாரிஸை உ.பி வாரியர்ஸ் அணி அவரது அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்குத் தன்வசப்படுத்தியது.
இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் உ.பி வாரியர்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அத்துடன் இந்திய ஆல்ரவுண்டர் சினே ராணாவையும் ரூ.30 லட்சத்திற்கும், விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவை ரூ.30 லட்சத்திற்கும் உ.பி வாரியர்ஸ் அணி வாங்கியது.
அதேவேளையில், இந்திய விக்கெட் கீப்பர்களான தனியா பாட்டியா மற்றும் நுஷாத் பர்வீன் ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வராததால் அவர்கள் முதல் சுற்றில் விற்பனையாகாத வீராங்கனைகளாக மாறினர்.
தொடர்ந்து ஏலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.