திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு காரணமான மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இதற்கான விளக்கத்தினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அண்மையில் அளித்துள்ளது. இதற்கான ஆராய்ச்சியில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி, கோவை கே.எம்.சி.எச். மற்றும் பி.எஸ்.ஜி.மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிக்கழகம், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் முடிவாக தற்போது 12 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா தடுப்பூசி 1 டோஸ் போட்டுக்கொண்டவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது, 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களின் இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
729 பேரின் மரணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அறிக்கை வெளியீடு
மேலும் இந்த திடீர் மரணங்களுக்கு மதுப்பழக்கம், சிகரெட், குடும்ப வரலாறு, தவறான வாழ்க்கை முறைகள், மிக அதிகளவு உடல் உழைப்பு, இறப்பதற்கு 48 மணி நேரத்திற்குள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டது போன்றவைகள் தான் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. எனவே, இளம் வயதினரிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியில் துவங்கப்பட்ட இந்த ஆய்வு கடந்த மார்ச் மாதம் வரை நடந்துள்ளது. இந்த காலகட்டத்திற்கிடையே உயிரிழந்த 729 பேரின் மரணங்களையும் ஆய்வு செய்ததன் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.