அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு
கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்ட BA.2.86 இன் வழித்தோன்றலான JN.1 என்ற கோவிட் துணை வகையின் தாக்கம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்பு கண்டறியப்பட்ட வகைகளை விட வேறுபட்ட JN.1 வகை தொற்று, விரைவாக பரவக்கூடியது. JN.1 வகை கொரோனா தொற்று, கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், உலகின் பிற பகுதிகளுடன் சர்வதேச பயணத்தின் மூலம் இந்தியா தொடர்பு கொண்டிருப்பதால், இத்தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
ஏழு மாதங்களுக்குப் பின் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா
"இந்தியா விழிப்புடன் உள்ளது, அதனால் தான் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு கடுமையான நோய் தொற்று பதிவாகவில்லை" என புதிய அச்சுறுத்தும் கோவிட்-19 வகைகளை வரிசைப்படுத்துதல் மற்றும் கண்காணிக்கும் பணியில் உள்ள, பல-ஏஜென்சி, பான்-இந்தியா நெட்வொர்க்கான, இந்தியா SARS-CoV-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG), அமைப்பின் தலைவர் என்.கே. அரோரா தெரிவித்தார். "ஏழு மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவை பொறுத்தவரையில், இதன் தீவிரத் தன்மை முன்பிருந்தது போல் தான் உள்ளது" என தேசிய இந்திய மருத்துவ சங்கம் கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவர், ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.
அதிதீவிரமாக பரவக்கூடும் JN.1 வகை கொரோனா
ராஜீவ் ஜெயதேவன் மேலும் கூறுகையில், "JN.1 என்பது கடுமையான நோய் எதிர்ப்பு சக்தியை-தவிர்க்கும் மற்றும் வேகமாக பரவும் வகை ஆகும், இது XBB(இந்த ஆண்டு ஏப்ரலில் பரவிய வகை) மற்றும் இந்த வைரஸின் அனைத்து முந்தைய பதிப்புகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது" என தெரிவித்தார். இதன் மூலம் கொரோனா தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பாதிக்கப்படலாம் என, ஜெயதேவன் கூறியது குறிப்பிடத்தக்கது.