தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; கொள்முதல் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசு மருத்துவ கட்டமைப்பின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையை உயர்த்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க 'தாய்மாமன் சீர்' முறையை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கும் 1 கிராம் எடையுள்ள, 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
விவரங்கள்
நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்முதல் விவரங்கள்
இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ₹755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 4.41 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை பிறந்த 1.28 லட்சம் குழந்தைகளுக்காக ₹220 கோடி மதிப்பிலான மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம் மூலம் ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனங்கள் 70:30 என்ற விகிதத்தில் இவற்றை விநியோகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி வரம்புகளும் விண்ணப்பிக்கும் முறையும்
தமிழ்நாட்டை இருப்பிடமாக கொண்ட தாய்மார்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் இருப்பிடச் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
குழந்தைகளின் பாலின பாகுபாடின்றியும், வரம்பின்றியும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்த மோதிரம் தடையின்றி வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு, தாய்மாமன் என்ற சமூகக் கடமையை ஏற்றுக்கொண்டு வழங்கும் இந்த தங்க மோதிரம், ஏழை எளிய மக்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியையும், பொது சுகாதாரத்துறையில் ஒரு பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.