ரூ.2666 கோடி முதலீடு, 5365 பேருக்கு வேலைவாய்ப்பு: சிகாகோவில் பெரும் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்
ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 பணியிடங்கள் உருவாக்கப்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மேலும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தொழில்நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஏற்கனவே சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதன் தொடர்ச்சியாக சிகாகோ மாநிலத்திலும் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
Twitter Post
திருச்சி மற்றும் காஞ்சிபுரத்தில் முதலீடு
இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பு படி: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 9.9.2024 அன்று சிகாகோவில், ஜாபில் நிறுவனத்துடன் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் மின்னணு உற்பத்தி நிறுவனத்தை திருச்சியில் அமைக்கவும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் 666 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவனத்தை விரிவாக்குவதற்கும் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட்அப்கள் போன்ற தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித் திறனை மேம்படுத்துவதற்கும் உதவும்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாபில் மற்றும் ராக்வெல் நிறுவனங்கள்
ஜாபில் நிறுவனம், ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள் வழங்கும் நிறுவனமாகும். தமிழ்நாடு முதல்வரின் முன்னிலையில், ஜாபில் மற்றும் தமிழ்நாடு அரசுக்கிடையே 2000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு உற்பத்தி நிறுவனத்தை திருச்சிராப்பள்ளியில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகப்பட்டது. ராக்வெல் ஆட்டோமேஷன், உலகின் மிகப்பெரிய தொழிற்துறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மாற்றம் (Industrial Automation and Digital Transformation) நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு முதல்வரின் முன்னிலையில், ராக்வெல் ஆட்டோமேஷன் மற்றும் தமிழ்நாடு அரசுக்கிடையே 666 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகப்பட்டது.