வயநாடு நிலச்சரிவிற்கும், அரபிக்கடலின் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு உள்ளது என்கிறார் நிபுணர்
அரபிக்கடலின் வெப்பமயமாதல், ஆழமான மேக அமைப்புகளை உருவாக்குகிறது. இது குறுகிய காலத்தில் கேரளாவில் மிக அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கிறது மற்றும் நிலச்சரிவுக்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது என்று மூத்த காலநிலை விஞ்ஞானி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் செவ்வாய்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டது, குறைந்தது 143 பேர் இறந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தொடர் மழை காரணமாக மண் சரிவு
கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (குசாட்) வளிமண்டல ரேடார் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட மையத்தின் இயக்குநர் எஸ் அபிலாஷ் கூறுகையில், காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்கள் கொங்கன் முழுவதையும் பாதித்துள்ள தீவிரப் பருவமழை காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக பிராந்தியத்தில் அதிக மழை பெய்து வருகிறது. இரண்டு வார மழைக்குப் பிறகு மண் இலகுவாகிவிட்டது. முன்னதாக திங்களன்று அரபிக்கடலில் திங்களன்று ஆழமான மீசோஸ்கேல் மேக அமைப்பு உருவானது. இதனால், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் கண்ணூரில் மிகக் கனமழைக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, ஏற்கனவே இலகுவாக இருந்த மண், நிலச்சரிவுகளை ஏற்படுத்தியாக அவர் PTI க்கு தெரிவித்தார்.
2019 போன்றதொரு நிலை ஏற்பட வாய்ப்பிருந்ததாக நிபுணர் கூறுகிறார்
"2019 கேரளா வெள்ளத்தின் போது காணப்பட்டதைப் போலவே மேகங்கள் மிகவும் ஆழமாக இருந்தன" என்று அவர் மேலும் கூறினார். தென்கிழக்கு அரேபியக் கடலில் மிக ஆழமான மேகங்கள் உருவாகும் போக்கை விஞ்ஞானிகள் கவனித்துள்ளதாகவும், சில சமயங்களில் இந்த அமைப்புகள் 2019 ஆம் ஆண்டைப் போல நிலத்திற்குள் ஊடுருவுவதாகவும் அவர் கூறினார். "தென்கிழக்கு அரபிக் கடல் வெப்பமடைந்து வருவதாக எங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, இதனால் கேரளா உட்பட இந்த பகுதிக்கு மேலே உள்ள வளிமண்டலம் வெப்ப இயக்கவியல் ரீதியாக நிலையற்றதாக மாறுகிறது" என்று அபிலாஷ் கூறினார். காலநிலை மாற்றத்துடன், ஆழமான மேகங்களுடன் கூடிய மழை தாங்கும் பெல்ட் தெற்கு நோக்கி நீண்டுள்ளது, இதுவே மிக அதிக மழைக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.