திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கிய சென்னை தொழிலதிபர் வர்தமான் ஜெயின் யார்?
செய்தி முன்னோட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின் மற்றும் அவரது மனைவி ராதிகா ஜெயின் ஆகியோர் இன்று 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி நர புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அதிகாரிகளிடம் இந்த ஆபரணங்கள் ஒப்படைக்கப்பட்டன. சுமார் ரூ.150 கோடி முதல் ரூ.206 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ள இந்த நன்கொடை, திருப்பதி கோயில் வரலாற்றில் தனிநபர் ஒருவரால் வழங்கப்பட்ட மிகப்பெரிய காணிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விவரங்கள்
யார் இந்த சென்னை தொழிலதிபர் வர்தமான் ஜெயின்?
சென்னையை சேர்ந்த வர்தமான் ஜெயின், சுகாதாரத் தொழில்நுட்பம், பிபிஓ மற்றும் ரோபோட்டிக் ஆட்டோமேஷன் ஆகிய துறைகளில் புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார்.
சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பயின்றார்.
மருத்துவத் துறைக்கு தொழில்நுட்பச் சேவைகளை வழங்கும் ஆக்சஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் துணைத் தலைவரான இவர், விஷன் ஹெல்த்சோர்ஸ் நிறுவனத்தை இணைந்து தொடங்கியதோடு, டெல் சர்வீசஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவு நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், மருத்துவக் குறியீட்டு முறை மற்றும் படச் செயலாக்கம் தொடர்பாக பல காப்புரிமைகளையும் இவர் தன்வசம் வைத்துள்ளார்.
காணிக்கை
121 கிலோ தங்க காணிக்கையில் இடம்பெற்றுள்ள ஆபரணங்கள்
இந்த நன்கொடையில், ஏழுமலையானை அலங்கரிக்கும் வகையில் திருவாபரணக் கிரீடம், சங்கு சக்கரங்கள், தோள்பட்டை ஆபரணங்கள், ஒட்டியாணம், கை ஆபரணங்கள் மற்றும் பாதக் கமலங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
வர்தமான் ஜெயின் திருப்பதிக்கு நன்கொடை அளிப்பது இது முதல் முறையல்ல; கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானத்தின் பல்வேறு திட்டங்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறார்.
குறிப்பாக, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) மேம்பாட்டிற்காக ரூ.7 கோடி, தேவஸ்தான கோசாலையில் கால்நடைத் தீவன ஆலை அமைக்க ரூ.5 கோடி மற்றும் உண்டியல் காணிக்கை நாணயங்களைப் பிரித்து எண்ணும் இயந்திரத்திற்காக ரூ.1 கோடி ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
இதுதவிர, கடந்த மே 2026-இல் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக மின்சாரப் பேருந்துகளையும் அவர் நன்கொடையாக அளித்துள்ளார்.
சமூகப் பணிகள்
கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் சமூகப் பணிகள்
ஆன்மீக பணிகளைத் தாண்டி மருத்துவம், கல்வி மற்றும் இளைஞர் திறன் மேம்பாட்டிலும் வர்தமான் ஜெயின் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார்.
சென்னையில் குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில் முன்னணியில் உள்ள காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராக இவர் செயல்பட்டு வருகிறார்.
மேலும், 'சரிதா ஜெயின் அறக்கட்டளை' மூலம் வித்யா சேவா மற்றும் வைத்திய சேவா திட்டங்களின் கீழ் ஏழை மாணவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவுவதோடு, பின்தங்கிய இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் ஆவிஷ்கார் அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
మహాదాతృత్వానికి నిదర్శనం.. శ్రీవారికి రూ.207.6 కోట్ల విలువైన 121 కిలోల బంగారు ఆభరణాల సమర్పణ. ఏపీ ముఖ్యమంత్రి శ్రీ నారా చంద్రబాబు నాయుడు సమక్షంలో చెన్నైకి చెందిన దాతలు శ్రీ వర్ధమాన్ జైన్, శ్రీమతి రాధిక జైన్ దంపతులు 46 రకాల ఆభరణాలను శ్రీవారికి సమర్పించారు.
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) November 26, 2026
1. పాద కవచములు – 2
2.… pic.twitter.com/HNXAW9qqen