சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நாளை(அக்.,27)நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கலந்துக்கொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று(அக்.,26)மாலை 6 மணிக்கு பெங்களூரிலிருந்து விமானப்படை தனி விமானம் மூலம் புறப்பட்டு 6.50 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கவுள்ள நிலையில், நாளை காலை அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளார். அதன்பின்னர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகு மதியம் 12.05 மணிக்கு தனிவிமானத்தில் டெல்லி சென்றடையவுள்ளார். இவரின் வருகையினையொட்டி சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் 5,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தம்
இவரின் வருகையினையொட்டி சென்னையில் அவர் பயணம் மேற்கொள்ளும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் ஆளுநர் மாளிகை செல்லும் வழியான ஜி.எஸ்.டி.,சாலையில் போக்குவரத்து மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை நிறுத்தப்படும். அதேபோல் நாளை காலை அவர் 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளதால், கிண்டி-உத்தண்டி சாலையில் காலை 9 மணி முதல் 10 மணிவரை போக்குவரத்து நிறுத்தப்படும். மீண்டும் அவர் 11.30 மணிக்கு புறப்பட்டு பல்கலைக்கழகத்திலிருந்து 12.30 மணியளவில் சென்னை விமானநிலையத்திற்கு செல்லவுள்ளார். அதனால் அந்நேரத்திலும் குறிப்பிட்ட வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.