சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்டீன் பணியாளர், எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான 17 இடங்கள் காலியாக இருந்தது. இந்த காலி பணியிடங்களுக்கு 10வது மற்றும் 12வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலுமிருந்து 12,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த பணிக்கு ரூ.30,000 சம்பளம் மற்றும் சென்னையிலேயே வேலை என்பதால் பல மாநிலங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் நடந்த தேர்வில் 1600 பேர் பங்கேற்பு
அதன்படி தகுதியுள்ள 1,600 விண்ணப்பத்தாரர்கள் நேற்று(அக்.,14) சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அதில் ஹரியானா ,மாநிலத்தை சேர்ந்த ஓர் மாணவரின் நடவடிக்கை சந்தேகமளித்த நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
ப்ளூடூத் கருவிகள் கொண்டு தேர்வு எழுதி மோசடி
அப்போது அவரின் காதில் சிறிய ப்ளூடூத் கருவி மற்றும் வயிற்றில் சிம்கார்டுகளை பொருத்திய மொபைல் போன் வடிவிலுள்ள கருவி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டதில், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 30 பேர் இதேபோன்ற நூதன மோசடியான வகையில் தேர்வு எழுதி வருவது தெரியவந்துள்ளது. இதனிடையே, இவர்களுக்கு வெளியிலிருந்து பதில்களை அளித்து உதவிய குழு தப்பியோடியது என்றும் கூறப்படுகிறது.
ரூ.10,000 கொடுத்து தேர்வு எழுதியதாக வாக்குமூலம்
இதனை தொடர்ந்து மோசடி முறையில் தேர்வெழுதிய 30 பேர் வடக்கு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காவல்துறை இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ரூ.10,000 கொடுத்து இவ்வாறு தேர்வு எழுதியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களுள் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபரும் பிடிபட்ட நிலையில் அவரை சிறையில் அடைத்து தொடர்ந்து விசாரித்துவரும் காவல்துறை மற்ற நபர்களை ஜாமீனில் விடுவித்துள்ளது.
மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்?
மேலும் இனி இவர்கள் எந்தவொரு அரசு பணிக்கான போட்டித்தேர்விலும் பங்கேற்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் நூதன மோசடியில் ஈடுபட்ட 30 பேரில் 26 பேர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் உத்தரப்பிரதேசம் மற்ற 2 பேர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் ரயிலில் வருகையில் இந்த மோசடிக்கான திட்டத்தினை தீட்டியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே இவர்களுக்கு உதவிய சுங்கத் துறை அதிகாரிகள் யார்? மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்ற கோணத்தில் விசாரணை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.