Page Loader
பள்ளி மாணவர்களிடையே கல்வித் திறன் குறைந்துள்ளதைக் காட்டும் மத்திய அரசின் ஆய்வு
மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பீடு செய்ய நாடு முழுவதும் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

பள்ளி மாணவர்களிடையே கல்வித் திறன் குறைந்துள்ளதைக் காட்டும் மத்திய அரசின் ஆய்வு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2025
08:49 am

செய்தி முன்னோட்டம்

நடப்பு கல்வியாண்டில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில், நாட்டின் மத்திய, மாநில மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 53% மாணவர்களுக்கே 10ம் வாய்ப்பாடு வரை சரியாக சொல்லும் திறன் உள்ளது என்பது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், மூன்றாம், ஆறாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பீடு செய்ய நாடு முழுவதும் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 74,229 பள்ளிகள், 21.15 லட்சம் மாணவர்கள், மற்றும் 2.70 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆய்வானது, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 781 மாவட்டங்களை உள்ளடக்கியது.

கண்டறிதல்கள்

முக்கியக் கண்டறிதல்கள்

மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 55% பேருக்கு மட்டுமே 1-99 வரை எண்ணிக்கைகளை ஏறும் மற்றும் இறங்கும் வரிசையில் ஒழுங்குபடுத்தும் திறன் உள்ளது. 58% மாணவர்களால் மட்டுமே இரண்டு இலக்க கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை சரியாக போட முடிகிறது. மத்திய அரசு பள்ளி மாணவர்கள், குறிப்பாக மூன்றாம் வகுப்பில் கணிதத்தில் குறைந்த திறன் பெற்றுள்ளனர். மாநில அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கணிதத்தில் பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பல பாடங்களில் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளனர், குறிப்பாக மொழிப் பாடத்தில். தனியார் பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் முன்னிலை வகித்தாலும், கணிதத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.