சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ
சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு மாநிலங்களிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, இந்த கும்பலை கைது செய்துள்ளது. தற்போது மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், கொல்கத்தா, சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளிலும் சிக்கிம் மாநிலத்தில் காங்டாக்கிலும் சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட மூத்த அதிகாரி
சிலிகுரியில் பாஸ்போர்ட் சேவையின் மூத்த கண்காணிப்பாளர் லகு கேந்த்ராஸ்(PSLK), கௌதம் குமார் ஷாவும் ஒரு இடைத்தரகரும் சிபிஐயால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் சேவையின் மூத்த கண்காணிப்பாளர் கௌதம் குமார் ஷா, பாஸ்போர்ட் வழங்க ₹1.90 லட்சம் லஞ்சமாக பெறும் போது கையும் களவுமாக பிடிபட்டார். அவர் பிடிபட்ட பின்னர், சிபிஐ அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
பல சந்தேக நபர்கள் விசாரணை வலையின் கீழ் உள்ளனர்
மேலும் சிபிஐ அதிகாரிகள், அவரிடம் இருந்த போலி பாஸ்போர்ட்டுகள், ஆதார் கார்டுகள் மற்றும் பிற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். "சோதனை நடந்து வருகிறது. மேலும் பல சந்தேக நபர்கள் விசாரணை வலையின் கீழ் உள்ளனர். மோசடியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் தொடர்பான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்" என அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கியதற்காக அரசு அதிகாரிகள் உட்பட 24 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 16 அரசு அதிகாரிகள் மீது சிபிஐ பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தகுதியில்லாத மற்றும் இந்திய குடியுரிமை இல்லாத நபர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு அந்த கும்பல் பாஸ்போர்ட் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.