தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடகாவில் விவசாயிகள் சிலர் புதன்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே உள்ள மண்டியாவில் புதன்கிழமை நள்ளிரவு போராட்டம் தொடங்கியது. தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5,000 கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் ஆணைய குழுவின் பரிந்துரைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏ தர்ஷன் புட்டனையாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டது. இதற்கு பதிலளித்து பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ள கர்நாடக அரசு, தீர்ப்பாயத்தின் உத்தரவு மாநிலத்தில் சாதாரண பருவமழை இருக்கும் சமயத்திற்கு தான் என்றும், தற்போது பருவமழை பொய்த்துவிட்டதால் அதன்படி செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. பருவமழை பொய்த்துவிட்டதால் நீர்த்தேக்கங்கள் காலியாகி, குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதால், தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்த காவிரி பிரச்சினை தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளதால், உரிய தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சமும் தமிழ்நாட்டில் உள்ள காவிரி பாசன விவசாயிகளிடம் எழுந்துள்ளது.