Page Loader
அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு 
அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு 

எழுதியவர் Nivetha P
Dec 25, 2023
02:21 pm

செய்தி முன்னோட்டம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவரின் சொத்துக்குவிப்பு வழக்கினை விசாரிக்காமல் இருக்க மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அந்த மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற பொழுது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கடந்த 1ம் தேதி கைது செய்தனர். மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட இவரிடம் நீதிமன்ற அனுமதி பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 19ம் தேதி இதுகுறித்த விசாரணை நடந்தது.

பறிமுதல் 

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு கடந்த 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது

அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகம்மது ஜின்னா நீதிபதி சிவஞானம் முன்பு ஆஜராகி, கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியிடமிருந்து அவரது மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 75 அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் உள்ளது என்றும், அதனால் இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார். இதனையடுத்து அங்கித் திவாரியின் ஜாமீன் மனு கடந்த 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஸ்பி சத்யசீலன் தலைமையில் சோதனை மேற்கொள்ள மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இவர்களை சோதனை மேற்கொள்ளவிடாமலும், அலுவலகத்திற்குள் நுழைய விடாமலும் தடுத்ததாக கூறப்படுகிறது.

சம்மன் 

விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்

சில மணிநேர இடையூருக்கு பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கித் திவாரியின் அறையினை சோதனையிட்டுள்ளனர். இதற்கிடையே, தங்கள் பணியினை செய்யவிடாமல் தடுத்ததாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அதிகாரிகளின் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு மதுரை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.