Loading...
தலைமைத் தேர்தல் ஆணையரைத் தண்டிக்க முடியுமா? 2023 சட்டப் பிரிவு 16 விளக்கும் உண்மை
தேர்தல் ஆணையர்கள்

தலைமைத் தேர்தல் ஆணையரைத் தண்டிக்க முடியுமா? 2023 சட்டப் பிரிவு 16 விளக்கும் உண்மை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2026
07:33 pm

செய்தி முன்னோட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகக் கூறி சிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் புதிய தேர்தல் ஆணையச் சட்டத்தின் பிரிவு 16-ன் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சட்டம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு நாட்டிலேயே மிகவும் விதிவிலக்கான ஒன்றாகும். கூடுதல் விபரங்கள் இங்கே:-

பாதுகாப்பு

நீதிபதிகளை விட பிரதமர், குடியரசுத் தலைவருக்கு இணையான பாதுகாப்பா?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதாடுகையில், "இந்த சட்டம் தேர்தல் ஆணையருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விட அதிக சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது" எனக் குறிப்பிட்டார்.

இதற்கு நீதிபதி ஜோய்மால்யா பாக்சி கூறுகையில், "இத்தகைய முழுமையான சட்டப் பாதுகாப்பு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.

நாட்டின் பிரதமருக்குக் கூட இவ்வளவு பாதுகாப்பு கிடையாது" என வாய்மொழியாக கருத்து தெரிவித்தார்.

சட்டப் பிரிவு 16

என்ன சொல்கிறது 2023 தேர்தல் ஆணைய சட்டப் பிரிவு 16?

2023 ஆம் ஆண்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டத்தின் பிரிவு 16-ன் படி, தேர்தல் ஆணையர்கள் தங்களது பதவிக் காலத்தில் அதிகாரப்பூர்வப் பணிகளைச் செய்யும்போது எடுக்கும் முடிவுகளுக்காக அவர்கள் மீது எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது.

அவர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட இந்தச் சட்டப் பாதுகாப்புத் தொடர்ந்து நீடிக்கும்.

இதனால் அவர்கள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளை சாதாரண நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்துவது சட்டரீதியாகப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

வேறுபாடு

நீதிபதிகள் பாதுகாப்பு சட்டத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

1985 ஆம் ஆண்டின் நீதிபதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இதேபோன்ற பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த சட்டத்தின் பிரிவு 3(2)-ன் படி, தேவைப்பட்டால் மத்திய அரசோ அல்லது உச்ச நீதிமன்றமோ நீதிபதிகள் மீது விசாரணை நடத்த அதிகாரமுண்டு.

ஆனால், 2023 தேர்தல் ஆணையச் சட்டத்தில் இந்த நிபந்தனை இடம்பெறவில்லை.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT