சட்டமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு
மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றம் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் அண்மையில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 27 ஆண்டுகளாக இந்த மசோதாவை நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தநிலையில், இந்த மசோதாவானது புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கருத்து தெரிவித்த நிலையில், இடஒதுக்கீட்டினை வரவேற்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறினர். இதனைத்தொடர்ந்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், மசோதாவுக்கு ஆதரவாக 454 பேர் வாக்களித்தனர், இருவர் மட்டும் எதிராக வாக்களித்தனர். இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டிய காரணத்தினால் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை என்று கூறப்பட்ட நிலையில், இந்த மசோதா பெரும்பான்மையான வாக்குகளை பெற்றது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேறிய முதல் மசோதா
இதனையடுத்து, மக்களவையில் 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பொழுது, 2 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். கிட்டத்தட்ட 10 மணிநேரம் இதுகுறித்த விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்ற பிறகு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனிடையே இந்த மசோதாவிற்கு 'நாரி சக்தி வந்தன்' என்று பெயரிடப்பட்டது. அதேபோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேறிய முதல் மசோதா என்னும் பெருமையினையும் பெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த மசோதாவிற்கு திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், மசோதாவாக இருந்தது, இனி அதிகாரபூர்வமாக சட்டமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.