4 வயது மகனை கொன்ற வழக்கு: பிரிந்த கணவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் பெங்களூரு சிஇஓ
பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு நாளுக்கு பிடிபட்டார். அந்த 4 வயது சிறுவன் துண்டு அல்லது தலையணையால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரிவித்துள்ளனர். அந்த சிறுவனின் கொலை குறித்து மேலும் வெளியாகி இருக்கும் தகவல் இந்த இணைப்பில் உள்ள பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தனது 4 வயது மகனை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சுசனா சேத்தும்(39), அவரது கணவர் வெங்கட் ராமனும் பிரிந்துவிட்டனர். தற்போது விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
கணவர் மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நீதிமன்ற ஆவணங்களின் படி, தனது கணவர் தனக்கு எதிராக குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக சுசனா சேத் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது கணவர் மாதத்திற்கு ரூ.9 லட்சம் வருமானம் பெறுவதால், தனக்கு ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் வாங்கி தர வேண்டும் என்று சுசனா சேத் நீதிமன்றத்தில் முன்பு கோரியுள்ளார். சுசனா சேத்தும், அவரது கணவர் வெங்கட் ராமனும் நவம்பர் 18, 2010 அன்று கொல்கத்தாவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
சுசனா சேத்தும் அவரது மகனும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு
ஆகஸ்ட் 14, 2019 அன்று அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். நீதிமன்ற ஆவணங்களின்படி, ஆகஸ்ட் 2022இல் வெங்கட ராமன் PRக்கு எதிராக சுசனா சேத் குடும்ப வன்முறை வழக்கைத் தாக்கல் செய்த குடும்ப வன்முறை காரணமாக மார்ச் 2021க்கு பிறகு தன் கணவனை விட்டு பிரிந்துவிட்டதாக சுசனா சேத் கூறியுள்ளார். குடும்ப வன்முறையை நிரூபிப்பதற்காக வாட்ஸ்அப் செய்திகள், படங்கள் மற்றும் மருத்துவப் பதிவுகள் ஆகியவற்றை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். மேலும், தன்னையும், தன் மகனையும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக தனது கணவர் மீது சுசனா சேத் குற்றம் சாட்டியுள்ளார்.
தன் மகனை சுசனா சேத் எதற்காக கொன்றார்?
ஆனால், அந்த குற்றசாட்டுகளை அவரது கணவர் வெங்கட் ராமன் நீதிமன்றத்தின் முன்னிலையில் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் தன் மகனை அழைத்து கொண்டு கோவா சென்ற சுசனா சேத் அங்கு வைத்து தனது 4 வயது மகனை கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடக்கும் போது வெங்கட் ராமன் ஜகார்தாவில் இருந்துள்ளார். இதுவரை இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுசனா சேத்தை எப்படி போலீஸார் திறமையாக பிடித்தனர் என்பதன் முழு விவரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் கொலையில் நீடிக்கும் மர்மங்கள்
அந்த நான்கு வயது சிறுவனின் தந்தை வெங்கட் ராமன், தனது குழந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் செவ்வாய்க்கிழமை மாலை ஜகார்த்தாவிலிருந்து இந்தியா திரும்பினார். வெங்கட் ராமன், கர்நாடகாவின் சித்ரதுர்காவுக்கு வந்ததும், தனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்தார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் அறையில் இருந்து சில காலியான இருமல் சிரப் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அதுவும் சிறுவனின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், சுசனா சேத், துண்டு அல்லது தலையணையைப் பயன்படுத்தி தனது மகனின் மூச்சை நிறுத்தி கொன்றதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.