கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது
39 வயதான பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் பிடிபட்டார். செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப்பான மைண்ட்ஃபுல் AI லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நேற்று ஒரு பையில் வைத்து தனது மகனின் உடலை எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார். வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தனது இளம் மகனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சுசனா சேத், கடந்த சனிக்கிழமையன்று தனது மகனுடன் வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பனியன் கிராண்டேவுக்குச் சென்றார்.
சந்தேகத்திற்கிடமான விஷயத்தை புகார் அளித்த கோவா ஹோட்டல் ஊழியர்கள்
அதன்பிறகு, நேற்று தனியாக அறையை விட்டு வெளியேறிய அவர், பெங்களூரு செல்ல ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்யும்படி ஹோட்டல் ஊழியர்களிடம் கூறினார். விமானத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அவர் டாக்ஸியில் தான் செல்வேன் என்று கூறிவிட்டதாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அவருடன் அவரது மகன் இல்லாததையும் ஹோட்டல் ஊழியர்கள் கவனித்திருக்கின்றனர். அவர் வெளியேறிய பிறகு, அவர் தங்கியிருந்த அறையில் இரத்தக் கறைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கோவா காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அவர் சென்ற டாக்ஸிக்கு தொடர்புகொண்டு, சுசனா சேத்திடம் அவரது மகன் குறித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது, தனது மகன் தன்னுடைய நண்பரின் வீட்டில் இருப்பதாக கூறிய சுசனா சேத், ஒரு பொய்யான முகவரியை போலீஸாரிடம் கொடுத்திருக்கிறார்.
டாக்ஸி டிரைவரின் உதவியுடன் சுசனா சேத்தை பிடித்த கோவா காவல்துறை
அது பொய்யான முகவரி என்று தெரிந்ததும் மீண்டும் அந்த டாக்ஸி டிரைவரை தொடர்பு கொண்ட கோவா காவல்துறையினர், சுசனா சேத்துக்கு புரியாதபடி கொங்கணி மொழியில் பேசி உடனடியாக டாக்ஸியை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு திருப்புமாறு டிரைவரிடம் கேட்டு கொண்டனர். பெங்களூரில் இருந்து 200 கிமீ தொலைவில் இருக்கும் சித்ரதுர்காவில் உள்ள காவல் நிலையத்திற்கு வண்டியை திருப்பி விடுமாறு கோவா காவல்துறை அந்த டிரைவரிடம் கேட்டு கொண்டது. அந்த டிரைவர் காவல்துறையினர் சொன்னது போல் செய்ததையடுத்து, சித்ரதுர்கா போலீசார் சுசனா சேத்தை கைது செய்தனர். மேலும் அவர் கொண்டு சென்ற பையில் இருந்த அவரது மகனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின், கோவா காவல்துறையினர் சுசனா சேத்தை விசாரணைக்காக மீண்டும் கோவாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.