2026இன் டாப் 3 கார்கள் இவைதான்! பிஎம்டபிள்யூ முதல் ஹூண்டாய் வரை; உலக கார் விருதுகளுக்கான இறுதிப் பட்டியல் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
ஆட்டோமொபைல் துறையின் மிகவும் மதிப்புமிக்க கௌரவமாகக் கருதப்படும் வேர்ல்ட் கார் அவார்ட்ஸ் 2026 போட்டி தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆறு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தலா மூன்று சிறந்த கார்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 1, 2026 அன்று நியூயார்க் சர்வதேச ஆட்டோ ஷோவில் நடைபெறவுள்ள நேரலை நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
இந்தியா
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த விஷயம்
இந்தத் தேர்வினை 33 நாடுகளைச் சேர்ந்த 98 அனுபவம் வாய்ந்த சர்வதேச ஆட்டோமொபைல் இதழியலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் 'ஆட்டோ டுடே' இதழின் எடிட்டர் யோகேந்திர பிரதாப் ஒருவராகப் பங்கேற்றுள்ளது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். தகுதிபெற்ற வாகனங்களை நீதிபதிகள் தொழில்முறை ரீதியாக மதிப்பீடு செய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் இந்த இறுதிப் பட்டியலைத் தயாரித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பு முடிவுகள் கேபிஎம்ஜி நிறுவனத்தால் சுயாதீனமாக சரிபார்க்கப்பட்டுள்ளது.
சிறந்த கார்
உலகின் சிறந்த கார்
முதன்மை விருதான உலகின் சிறந்த கார் பிரிவில் பிஎம்டபிள்யூ iX3, ஹூண்டாய் பாலிசேட் மற்றும் நிசான் லீஃப் ஆகிய கார்கள் மோதுகின்றன. இதேபோல், சிறந்த எலக்ட்ரிக் வாகன பிரிவில் பிஎம்டபிள்யூ iX3, மெர்சிடிஸ் பென்ஸ் CLA மற்றும் நிசான் லீஃப் ஆகியவை இறுதிப் பட்டியலில் உள்ளன. சிறந்த சொகுசு கார் பிரிவில் கேடிலாக் விஸ்டிக், லூசிட் கிராவிட்டி மற்றும் வோல்வோ ES90 ஆகிய கார்கள் பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ஃபார்மன்ஸ் கார்
உலகின் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் கார்
அதிவேக மற்றும் செயல்திறன் மிக்க கார்களுக்கான பெர்ஃபார்மன்ஸ் கார் பிரிவில் பிஎம்டபிள்யூ M2 CS, செவ்ரோலெட் கார்வெட் E-Ray மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 6 N ஆகியவை இடம்பிடித்துள்ளன. நகர்ப்புற பயன்பாட்டிற்கான அர்பன் கார் பிரிவில் போஜுன் யெப் பிளஸ் (செவ்ரோலெட் ஸ்பார்க் EUV), ஃபயர்பிளை மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய கார்கள் தேர்வாகியுள்ளன. இறுதியாக, கார் டிசைன் பிரிவில் கியா PV5, மஸ்தா 6e மற்றும் வோல்வோ ES90 ஆகிய கார்கள் சர்வதேச வடிவமைப்பாளர்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆட்டோ ஷோ
நியூயார்க் ஆட்டோ ஷோ
இந்த விருதுப் பட்டியலானது எதிர்கால வாகனத் துறையில் நிலவும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக நியூயார்க் ஆட்டோ ஷோவின் தலைவர் மார்க் ஷீன்பெர்க் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளாக நியூயார்க் ஆட்டோ ஷோவுடன் இணைந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள அறிவிப்பில் எந்தக் கார் மகுடம் சூடும் என்பதைப் பார்க்க உலகெங்கிலும் உள்ள வாகன ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.