LOADING...
நார்வேயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு; ஈரான் போருடன் தொடர்பா?
நார்வேயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு

நார்வேயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு; ஈரான் போருடன் தொடர்பா?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 08, 2026
09:56 am

செய்தி முன்னோட்டம்

நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாலை 1:00 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஒரு சக்திவாய்ந்த வெடிச்சத்தம் கேட்டது. தூதரகத்தின் தூதரகப் பிரிவு (Consular Section) நுழைவாயிலைத் தாக்கிய இந்த வெடிப்புச் சம்பவத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், தூதரகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. "வெடிப்பு நடந்ததை நாங்கள் உறுதி செய்துள்ளோம். என்ன பொருள் வெடித்தது என்பது குறித்து இப்போது கூற முடியாது, ஆனால் இது ஒரு நபரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகத் தெரிகிறது" என்று ஓஸ்லோ காவல்துறை அதிகாரி மைக்கேல் டெல்லிமிர் தெரிவித்துள்ளார்.

தாக்கம்

ஈரான் - அமெரிக்கா போரின் தாக்கம்

சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகத்தைச் சுற்றியுள்ள பெரும் பகுதி காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் ஏற்கனவே பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஈரானின் தொழிற்சாலைகள் மற்றும் ராணுவ நிலைகள் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவின் தூதரகங்களை ஈரான் ஆதரவு குழுக்கள் குறிவைக்கலாம் என்ற எச்சரிக்கை நிலவி வந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே சில அமெரிக்கத் தூதரகங்கள் அச்சுறுத்தல்களை சந்தித்துள்ள நிலையில், தற்போது அமைதியான நாடாகக் கருதப்படும் நார்வேயிலும் இச்சம்பவம் நடந்துள்ளது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்

மக்கள் அச்சம்

தூதரகத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவசரக்கால மீட்புக் குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இது ஒரு தற்கொலைத் தாக்குதலா அல்லது வீசப்பட்ட வெடிகுண்டா என்பது குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement