தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை
இந்தியாவின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகரம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது அந்த மாவட்டத்தில், இந்த ஆண்டு நடைபெறும் 28வது தற்கொலையாகும். கோட்டாவின் வக்ஃப் நகர் பகுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த 20 வயது மாணவி, இளங்கலை நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். அவர் அவரது அறையில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார் என தெரிவித்த காவல்துறையினர், இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர், தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனவும், அந்த மாணவியின் பெற்றோர் பயிற்சி மையத்திற்கு வந்த பிறகு, அவரது அறை சோதனை இடப்படும் என தெரிவித்தனர்.
கோட்டாவில் தொடரும் தற்கொலைகள்
கோட்டா, இந்தியாவின் பயிற்சி வகுப்புகள் வணிகத்தின் தலைமை இடமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு ₹10,000 கோடி அளவில் வணிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின், இந்த ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் அரசு பயிற்சி மாயங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க குழு அமைத்தது. ஆகஸ்ட் 19ஆம் தேதி, தற்கொலைகளை தடுக்க அமைக்கப்பட்ட 15 நபர்கள் கொண்ட குழு, கட்டாயத் தேர்வுகள் நடத்துவது, மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் வகுப்புகள் பிரிப்பதை தவிர்த்து, அகரவரிசைப்படி வகுப்புகளைப் பிரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. கோட்டா மற்றும் சிகார் மாவட்டங்களில், கண்காணிப்பு மையங்கள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.