
ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்
செய்தி முன்னோட்டம்
நேற்று, ஜூன் 9ஆம் தேதி மாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து புனித தலத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
எனினும், பயங்கரவாதிகள் ரியாசி மாவட்டத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப் படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.
முக்கிய முன்னேற்றங்கள்
ரியாசி பயங்கரவாத தாக்குதலில் முக்கிய முன்னேற்றங்கள்:
இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த என்ஐஏ குழு ஒன்று ஜம்முவில் இருந்து ரியாசிக்கு புறப்பட்டுள்ளது.
NIA-ன் கண்காணிப்பாளர் நிலை அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
மேலும் அதன் தடயவியல் குழுவும் ரியாசிக்கு செல்கிறது. தாக்குதலின் விளைவாக ஒரு பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்த போதிலும் பயங்கரவாதிகள் பேருந்து மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் இந்தியா டுடேவிடம் தெரிவித்தனர்.
"பஸ் பள்ளத்தாக்கில் விழுந்த பிறகும், தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு பயங்கரவாதிகளில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்," என்று டெல்லியைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
உ.பி.யைச் சேர்ந்த மற்றொருவர், ஆறு பயங்கரவாதிகள் தங்களை தாக்கியதாகவும், அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தாகவும் கூறினார்.