ஆந்திர வெள்ளநிவாரண நிதி அளித்த சிம்புவுக்கு நன்றி தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
வெள்ளப்பாதிப்பு மீட்பு பணிகளுக்கு, நடிகர் சிம்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார். இந்த நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு நிதி உதவி வழங்கிய நடிகர் சிலம்பரசனுக்கு, ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய எக்ஸ் பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ள அவர்,"ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் திரு. சிலம்பரசன்.டி.ஆர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்" எனத்தெரிவித்துள்ளார்.
Twitter Post
நிவாரணம் வழங்கிய முதல் தமிழ் நடிகர்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி மெல்லமெல்ல சகஜ நிலைக்கு திரும்பிவரும் நிலையில், கடந்த வாரம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கே பெருவெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சிக்கலான சூழ்நிலையிலிருந்து மக்கள் மீண்டு வர தெலுங்கு நடிகர்கள் பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை அளித்தனர். இந்த நிலையில், தமிழ் சினிமாவிலிருந்து முதல் ஆளாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் நடிகர் சிம்பு. அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.