Page Loader
பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி
நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் வந்தது என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்

பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி

எழுதியவர் Nivetha P
Jul 28, 2023
05:08 pm

செய்தி முன்னோட்டம்

கடலூர், நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது. இதனை கண்டித்து பாமக.,தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஜூலை.,28)என்.எல்.சி. நிறுவனத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காவல்துறை அவரை கைது செய்த நிலையில், ஆத்திரமடைந்த பாமக'வினர் காவல்துறையினரின் வாகனங்கள்மீது கற்களை வீசியுள்ளனர். இதுப்பெரும் கலவரமாக வெடித்த நிலையில், காவல்துறை துப்பாக்கிச்சூடு, தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த கலவரம் காரணமாக தமிழக டி.ஜி.பி.,சங்கர் ஜிவால் தற்போது நெய்வேலி செல்லவுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேசிய சங்கர் ஜிவால், "கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் போர்க்களமாக மாறிய அப்பகுதி, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. காவல்துறை மீதும், அவர்கள் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

கலவரம் 

கடலூரில் இருந்து நெய்வேலி மார்க்கமாக செல்லும் அனைத்து தொலைதூர அரசு பேருந்துகளும் நிறுத்தம் 

மேலும் அவர், கலவரம் தொடர்பாக இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே கலவரம் நடந்த இடத்தினை மண்டல காவல்துறை ஐ.ஜி.,கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பேசிய அவர், என்.எல்.சி. நிறுவனத்தினை எதிர்த்து பாமக நடத்திய போராட்டத்தில் நடந்த கல்வீச்சில் 8 காவல்துறையினரும், 6 செய்தியாளர்களும் காயமடைந்துள்ளனர். அதே போல் கேமரா உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளது. என்.எல்.சி. நிறுவனத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த கலவரத்தின் காரணமாக கடலூரில் இருந்து நெய்வேலி மார்க்கமாக செல்லும் அனைத்து தொலைதூர அரசு பேருந்து சேவைகளும், திருச்சி, சேலம், தஞ்சாவூர், போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது.