Loading...
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்: கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் கைது
கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்: கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2026
06:31 pm

செய்தி முன்னோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர், எம்.எல்.ஏ.-வின் வீட்டிற்கு நேரில் சென்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வழக்கு

நீதிமன்றத் தலையீடும், ஐந்து பிரிவுகளில் வழக்கும்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை கண்காணிக்க ஐ.ஜி. காமினி மற்றும் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, புகார்தாரரான மாவட்ட ஆட்சியர் மற்றும் வழக்கின் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள வருவாய்த்துறை அதிகாரிகள், நேர்முக உதவியாளர் மற்றும் மெய்க்காப்பாளர் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

கைது

ரகசிய வாக்குமூலத்திற்குப் பிறகு கைது

விசாரணை அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணைக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் மற்றும் சாட்சிகள் கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

இதற்கு முன்பாக அருள் விக்னேஷிடம் விசாரணை மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தவில்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது இல்லத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்களிடம் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அருள் விக்னேஷிடம் பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதி கருதி தியாகதுருகம் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT