கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி
தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் அருகிலுள்ள பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னமும் பலர் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இச்சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டிருந்தார். இதனிடையே, தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்து 2 பேர் பலியான சம்பவம் மேலும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள், போதை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, சட்ட-ஒழுங்கு சீர்கேடு, போன்ற ஆட்சியின் பல முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவியிடம் மனு கொடுக்கப்போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்காக அவர் அதிமுக நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் இணைந்து கவர்னரிடம் மனு
அதன்படி இன்று(மே.,22) காலை சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகேயுள்ள பகுதியில் அதிமுக'வை சேர்ந்தோர் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் திமுக ஆட்சிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், எடப்பாடி கே பழனிசாமி குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு அவரது தலைமையில் கவர்னர்மாளிகை நோக்கி இந்த திட்டமிட்ட கண்டனப்பேரணியானது நடைபெற்றது. சின்னமலை பகுதியிலிருந்து அடையாறு, சர்தார்படேல் சாலை, கிண்டி வழியாக அதிமுக'வினர் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கவர்னரை சந்தித்து, எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மனுவினை அளித்துள்ளார்கள். அதிமுக சார்பில் நடந்த இந்த பேரணியில் எம்.எல்.ஏ.,க்கள்., மாவட்ட செயலாளர்கள்,எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.