
தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க 80 எம்.பிக்கள் ஆதரவு கையொப்பம்!
செய்தி முன்னோட்டம்
புத்த மதத்தலைவரும் திபெத்தின் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து நாடாளுமன்றத்தில், திபெத் தொடர்பான அனைத்துக் கட்சி குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 90 வயதான தலாய் லாமா, சீனாவின் அழுத்தத்தையடுத்து 1959-ல் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, தற்போது ஹிமாசலப் பிரதேசத்தில் வசித்து வருகிறார். இந்தியாவில் ஆன்மீக, அமைதியின் சின்னமாக வணங்கப்படுகிறார்.
விருது
விருது கோரிக்கைக்கு பெரும் ஆதரவு
இந்த முயற்சியை பாஜக ராஜ்யசபா எம்.பி. சுஜீத் குமார் தலைமையிலான குழு முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக அவர் கூறியது: "தலாய் லாமாவின் ஆன்மீக தொண்டுக்கும், இந்திய-திபெத் நட்பிற்காகவும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதற்காக 80 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். விரைவில் 100 எம்.பிக்களின் கையெழுத்து பெற்று, மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளோம்." இந்த முயற்சியில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலையீடு
சீனாவின் தலையீட்டை ஏற்க முடியாது
தலாய் லாமாவின் அடுத்த வாரிசை குறித்த தேர்வில் சீனாவுக்கு எந்த பங்களிப்பும் இருக்கக் கூடாது என்ற கூற்றையும் இந்த குழு வலியுறுத்தியுள்ளது. திபெத் தொடர்பான பிரச்சனைகளை நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் தொடர்ந்தும் வலியுறுத்த இருக்கிறோம் எனவும் கூறப்பட்டுள்ளது.
உயரிய கௌரவம்
பாரத ரத்னா விருது - இந்தியாவின் உயரிய கௌரவம்
'பாரத ரத்னா' விருது, இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இது சிறந்த சேவை மற்றும் பங்களிப்புகளுக்காக வழங்கப்படுகிறது. தலாய் லாமாவுக்கு இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்கிற இந்த வலியுறுத்தல், மென்மையான அரசியல் செய்தியையும், ஆன்மீக வழிகாட்டியாக தலாய் லாமாவின் பெருமையை வெளிக்கொணருகிறது. தலாய் லாமாவை பாரத ரத்னாவுக்குத் தேர்வு செய்யும் இக்கருத்துக்கு பரவலான வரவேற்பு இருக்கும் நிலையில், சீனாவுடன் மனசக்கப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவை மத்திய அரசு எடுக்குமா என பலரும் காத்துள்ளனர்.