7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 29, 2016 அன்று, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்று அழைக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் துணிச்சலான எல்லை தாண்டிய நடவடிக்கை மூலம், பாகிஸ்தானையும், உலகையும் ஒருசேர திகைக்க வைத்தது, இந்தியா. உரியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், பல இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கான இந்திய ராணுவத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக கூறப்பட்டது இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக். 2016 செப்டம்பரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் உள்ள பாகிஸ்தானின் ராணுவ ஏவுதளங்களுக்கு எதிராக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது, 'பயங்கரவாதிகள் மற்றும் அவர்களைப் பாதுகாத்தவர்களுடன் பலத்த உயிரிழப்புகளை' ஏற்படுத்தியது எனக்கூறப்பட்டது. அன்றிலிருந்து செப்டம்பர் 29ஆம் தேதியை 'சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக' அரசு கடைப்பிடித்து வருகிறது.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிய தகவல்கள்
செப்டம்பர் 18-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது-ஐ சேர்ந்த ஆயுதமேந்திய நான்கு தீவிரவாதிகளால் ஃபெடாயீன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த பதில்-தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, சரியாக பதினொரு நாட்களுக்குப் பிறகு, 29 செப்டம்பர் 2016 அன்று, இந்திய இராணுவ கமாண்டோக்கள் குழுக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிலோமீட்டர் எல்லைக்குள் உள்ள இலக்குகளைத் தாக்கியது.
பயங்கரவாத குழுக்களை கூண்டோடு ஒழித்த தாக்குதல்
இந்திய அரசு இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் எல்லையில் உள்ள "போராளிகளின் ஏவுதளங்களுக்கு" எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனக் கூறியது, மேலும் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளை" ஏற்படுத்தியதாகக் கூறியது. இந்த பழிவாங்கும் தாக்குதலுக்கு பிறகு,இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் "ஜம்மு காஷ்மீர் மற்றும் காஷ்மீருக்குள் ஊடுருவல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு தயாராகி வரும் "பயங்கரவாத குழுக்கள்" குறித்து "மிகவும் நம்பகமான மற்றும் குறிப்பிட்ட தகவல்கள்" கிடைத்துள்ளதாகவும், அதனால் ராணுவம் இந்த நடவடிக்கை எடுத்தது" எனத்தெரிவித்தார்.
நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல்
இந்த நடவடிக்கை நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது, பாகிஸ்தான் பக்கத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 500 மீட்டர் முதல் 2 கிமீ தொலைவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 27 அன்று இரவு சுமார் 10 மணியளவில், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் ராணுவ துருப்புக்கள் தங்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, லாஞ்ச்பேட்களில் உள்ள காவலர்கள், துப்பாக்கி சுடும் வீரர்களால் நடுநிலைப்படுத்தப்பட்டனர். இதற்கெல்லாம் முன்பாக, இந்திய இராணுவம், செப்டம்பர் 24 அன்று தனது சிறப்புப் படைக் குழுவை உருவாக்கத் தொடங்கியது. இரவு பார்வை சாதனங்களான Tavor 21 மற்றும் AK-47 தாக்குதல் துப்பாக்கிகளுடன் படை ஆயத்தமாகியது.
ராணுவ வீரர்கள் கொண்டு சென்ற ஆயுதங்கள்
ராணுவ வீரர்கள் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகள், தோள்பட்டை ஏவுகணைகள், கைத்துப்பாக்கிகள், உயர் வெடிகுண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் வெடிபொருட்களுடன் எல்லை தண்டி சென்றனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பந்தாடிய பின்னர், இரவோடு இரவாக மீண்டும் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்தனர். இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மறுநாள் தான் வெளிஉலகிற்கு தெரிய வந்தது. ஆனால், அங்கே தீவிரவாதிகள் இருப்பதையும், அவர்கள் பலியானதையும் பாகிஸ்தானால் பகிரங்கமாக கூறமுடியவில்லை. உண்மையை கூறினால், பயங்கரவாதத்திற்கு துணை போவதாக மற்ற நாடுகளின் கோவத்திற்கு ஆளாக நேரிடும் என்று மௌனமானது பாகிஸ்தான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2018ல், ராணுவ வீரர்களின் துணிச்சலைக் கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்து, செப்டம்பர் 28ஆம் தேதியை 'சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக' கொண்டாடியது.