2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 403 இந்திய மாணவர்கள், இயற்கை மரணங்கள், மருத்துவ பிரச்சினைகள் மற்றும் விபத்துகளால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில், மத்திய அமைச்சர் முரளீதரன் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில், கனடாவில் 2018 ஆம் ஆண்டு முதல் 91 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து (48), ரஷ்யா (40), அமெரிக்கா (36), ஆஸ்திரேலியா (35), உக்ரைன் (21), ஜெர்மனி (20), சைப்ரஸ் (14) , இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் (தலா 10) மாணவர்கள் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பில் இந்திய அரசு உறுதி
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் மத்திய அரசு உறுதிப்பூண்டு உள்ளதாக தெரிவித்தார். மூத்த அதிகாரிகள் தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, அங்கு படிக்கும் இந்திய மாணவர்களுடன் உரையாடுவதாக அவர் கூறினார். "வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன், இந்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்" என அமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் உயிரிழக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறித்து கேட்கப்பட்ட போது, வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, வெளிநாட்டில் அதிகப்படியான மாணவர்கள் படிக்க செல்வதால், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக கூறியிருந்தார்.