6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது?
லிபியாவில் வைத்து ஏமாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவிற்கு திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களை வரவேற்க அவர்களது குடும்பங்கள் கண்ணீருடன் காத்திருந்தன. இந்த வருடம் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் இத்தாலியில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த 17 பேரும் இந்தியாவை விட்டு வெளியேறியனர். பல்வேறு ட்ராவல் ஏஜென்சிகள் மூலம் அவர்கள் "விசா மற்றும் பணி அனுமதி"(பொய்யான ஆவணங்கள்) பெற்று, நாட்டை விட்டு வெளியேறினர். இந்த 17 பேரும் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது நிலங்களை விற்று, சேமிப்புகள் முழுவதையும் செலவழித்து அவர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டிருக்கின்றனர்.
அடிமைகளாக விற்கப்பட்ட இந்தியர்கள்
ஆனால், தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு அப்போது தெரியவில்லை. பொய்யான ஆவணங்களை வைத்து சட்டவிரோதமான முறையில் பிற நாடுகளுக்குள் நுழைய அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் அனுப்பட்டிருக்கின்றனர். இந்த 17 பேரும் முதலில் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து இறுதியாக, லிபியாவின் ஜுவாராவிற்கு அவர்களை அழைத்து சென்ற அவர்களது ஏஜென்ட், அவர்களை ஒரு உள்ளூர் குழுவிற்கு விற்றார். ஒவ்வொரு நாட்டிற்கும் அழைத்து செல்வதற்கு அவர்களது ஏஜென்ட் அவர்களிடம் நடு வழியில் அதிக பணம்வ சூலித்து இருக்கிறார். இதனால், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 12-14 லட்சம் ரூபாய் இழந்தனர். ஜுவாராவில், பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், பல மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு திரும்பிய பாதிக்கப்பட்டவர்களை கட்டி அணைத்து அழும் குடும்பங்கள்
17 பேரை மீட்க கடுமையாக போராடிய இந்திய தூதரகம்
அதன் பிறகு, தகுந்த ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "இந்த 17 பேரும் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட பின்னர் லிபியாவில் உள்ள ஸ்வாரா நகரில் ஆயுதமேந்திய குழுவால் சிறைபிடிக்கப்பட்டனர். அப்போதிருந்து, துனிஸில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களை சிறையிலிருந்து மீட்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது." என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ராகுல் சர்மா(33) தான் முதன்முதலில் இந்திய தூதரகம் மற்றும் எம்பி சாஹ்னியின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தாங்கள் லிபியாவில் சிக்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். "கூகுள் மூலம் தூதரகத்தின் தகவலையும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எம்.பி.யின் தகவலையும் கண்டுபிடித்தேன்" என்று சர்மா தெரிவித்துள்ளார்.
நாடு திரும்புவதற்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் தவித்த இளைஞர்கள்
ஜூன் 13ஆம் தேதி, லிபிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்டனர். ஆனால், அவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி அவர்களை லிபிய அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்திருந்தனர். துனிஸில் உள்ள இந்திய தூதர் மற்றும் டெல்லியில் உள்ள வெளியுறவு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்க வைக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது. நாடு திரும்புவதற்கு கூட பாதிக்கப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால், இந்திய தூதரகம் அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ததற்கான அவசர சான்றிதழ்களை வழங்கியது. மேலும், 17 பேருக்கும் தேவையான உணவு, மருந்துகள், உடைகள் உள்ளிட்டவற்றையும் தூதரகம் கவனித்து வந்தது. இவர்கள் இந்தியாவிற்கு திரும்புவதற்கான டிக்கெட்டுகளும் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன.