பட்டோடி குடும்பத்திற்கு அடுத்த சிக்கல்: ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை இழக்கக்கூடும்
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பட்டோடி குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.15,000 கோடி மதிப்புள்ள மூதாதையர் சொத்துக்கள் (பெரும்பான்மையான போபாலில் உள்ளவை), மீதான தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கிய பிறகு, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரலாம்.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், 1968ஆம் ஆண்டு எதிரி சொத்துச் சட்டத்தின் கீழ், மூதாதையர் சொத்துக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. அதை தொடர்ந்து தற்போது சைஃப் அலி கானின் பாரம்பரிய சொத்துக்களை இழக்கும் அபாயம் உள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, 1947-ம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த தனிநபர்களுக்குச் சொந்தமான சொத்துகளை மத்திய அரசு கோரலாம்.
விவரங்கள்
வழக்கின் விவரங்கள் என்ன?
மும்பையை தளமாகக் கொண்ட எதிரி சொத்துக் காவலர் அலுவலகம், 2015 இல் போபால் நவாப்பின் நிலத்தினை அரசாங்கச் சொத்தாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து பட்டோடி குடும்பம் நீதிமன்றத்திற்குச் சென்றது.
சைஃப் அலி கான், அவரது தாயார் நடிகை ஷர்மிளா தாகூர், சகோதரிகள் சோஹா அலி கான் மற்றும் சபா அலி கான் மற்றும் மறைந்த மன்சூர் அலி கான் பட்டோடியின் சகோதரி சபிஹா சுல்தான் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான எதிரி சொத்து வழக்கை 2015 இல் உயர்நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.
பட்டோடி குடும்பம் போபால் மற்றும் ரைசெனில் உள்ள தங்கள் நிலத்திற்கு உரிமை கோரி வருகிறது, இதில் மாளிகைகள், அரண்மனைகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள காடுகள் ஆகியவை அடங்கும்.
வரலாறு
பட்டோடி குடும்ப வரலாறு என்ன?
1947இல், போபால் ஒரு சமஸ்தானமாக இருந்தது மற்றும் அதன் கடைசி நவாப் நவாப் ஹமிதுல்லா கான் ஆவார்.
அவர் மன்சூர் அலி கான் பட்டோடியின் தாய்வழி தாத்தா ஆவார்.
நவாப் கானுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.
அவர்களில் மூத்த பெண் அபிதா சுல்தான் 1950இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். அவரது இரண்டாவது மகள், சஜிதா சுல்தான், இந்தியாவில் சைஃப் அலி கானின் தாத்தா நவாப் இப்திகார் அலி கான் பட்டோடியை மணந்து, சொத்துக்களின் சட்டப்பூர்வ வாரிசு ஆனார்.
2019ஆம் ஆண்டில், நீதிமன்றம் சஜிதா சுல்தானை சட்டப்பூர்வ வாரிசாக அங்கீகரித்தது.
இருப்பினும், அபிதா சுல்தான் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததன் விளைவாக, மத்திய அரசு, சொத்துக்களை எதிரி சொத்து என்று உரிமை கோரியது.