Loading...
4,000 அக்னிவீரர்களின் ரகசிய தகவல்களை திருடி டார்க் வெப்பில் விற்க முயற்சி: ஹரியானாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கைது
அக்னிவீரர்கள் தரவுகளை திருடி டார்க் வெப்பில் விற்க முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

4,000 அக்னிவீரர்களின் ரகசிய தகவல்களை திருடி டார்க் வெப்பில் விற்க முயற்சி: ஹரியானாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கைது

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
05:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகாலப் பணிக்காகத் தேர்வு செய்யப்படும் அக்னிவீர் வீரர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, அதனை இணையத்தின் இருண்ட உலகமான டார்க் வெப்பில் விற்பனை செய்ய முயன்ற ஹரியானா மாநிலம் வல்லப்கர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பிடித்து விசாரணை நடத்தியுள்ளது. முன்னாள் அக்னிவீரர்கள் தங்களைப் பதிவு செய்துகொண்டு, பிற அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த ஒரு சோதனை இணையதளத்தை இந்தச் சிறுவன் ஹேக் செய்துள்ளான். சுமார் 4,000 அக்னிவீரர்களின் தரவுகள் தன்னிடம் இருப்பதாகவும், அதனை 500 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாகவும் டார்க் வெப்பில் அச்சிறுவன் விளம்பரம் வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தரவுகளை திருடிய சிறுவன்

செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி தரவுகளைத் திருடிய சிறுவன்

இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி காவல்துறையின் புலனாய்வு மற்றும் மூலோபாய செயல்பாடுகள் பிரிவு (IFSO) அதிகாரிகள், அந்தச் சிறுவன் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவிகளின் உதவியுடன் சம்பந்தப்பட்ட சோதனை இணையதளத்திற்குள் ஊடுருவித் தகவல்களைத் திருடியுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

சிறுவனின் டிஜிட்டல் சாதனங்களைப் பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்து அக்னிவீரர்கள் தொடர்பான தரவுகளை மீட்டுள்ளனர்.

சிறுவன் என்பதால் சட்ட விதிகளின்படி அவனிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட பிறகு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

தகவல்களின் உண்மைத்தன்மை

தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்

சிறுவனின் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட தகவல்கள் உண்மையானவைதானா அல்லது சோதனைக்காக உருவாக்கப்பட்ட மாதிரித் தரவுகளா என்பதை உறுதிப்படுத்தும் பணியில் டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, அக்னிவீரர்களின் அதிகாரப்பூர்வத் தரவுத்தளத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்துள்ள இந்தச் சம்பவம், இணையப் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT