விஜய்- அனிருத் கூட்டணியில் உருவான படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள்: ஒரு பார்வை
லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நிகழ்ச்சிக்கு பாஸ் கேட்டு வந்த கோரிக்கைகளை அடுத்தும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது. இருப்பினும், லியோ திரைப்படத்தின் கேரள விநியோகஸ்த நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கேரளாவில் கொச்சியில் நடத்த விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சிலர் விஜய்-அனிருத் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்களுக்கும், இசை வெளியீட்டு விழாக்களுக்கும் ராசி இல்லை எனக் கூறுகின்றனர். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் உருவான மூன்று படங்களுக்கும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கவில்லை.
எளிமையான இசை வெளியீட்டு விழா
விஜய் அனிருத் கூட்டணியில், லியோ திரைப்படம் நான்காவது படம். இதற்கு முன், அனிருத், விஜய்யுடன் கத்தி, மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினார். இதில் எந்த படத்திற்கும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கவில்லை என்பது சுவாரசியமான விஷயம். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா, எளிமையான முறையில், ஒரு நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்டது. பின் இவர்கள் கூட்டணியில் 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், கொரோனா காரணமாக எளிமையாக நடத்தப்பட்டது. இத்திரைப்படத்திற்கு பின், பீஸ்ட் திரைப்படத்திற்காக மீண்டும் இக்கூட்டணி இணைந்தது. அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், முதலில் அறிவிக்கப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்து செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழா
விஜய் அனிருத் கூட்டணியின் நான்காம் படமான லியோவின் இசை வெளியீட்டு விழா முதலில் நேரு உள்விளையாட்டு அரங்கில், செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியானது. இசை வெளியீட்டு விழாவிற்காக மேடைகள் தயாராவது போன்ற சில புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை தற்போது ரத்து செய்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் -அனிருத் கூட்டணியின் நான்காவது திரைப்படத்திற்கும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா இல்லாமல் போனதால், இக்கூட்டணிக்கும் இசை வெளியீட்டு விழாவிற்கும் ராசி இல்லை போலும் எனது ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.