Loading...
ஜெயிலர் 2: ரஜினிகாந்த் பற்றி வித்யா பாலன் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்
ரஜினிகாந்த் பற்றி வித்யா பாலன் சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் 2: ரஜினிகாந்த் பற்றி வித்யா பாலன் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்

எழுதியவர் Vasuki
Oct 14, 2026
02:03 pm

செய்தி முன்னோட்டம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த தனது அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்தபோதிலும் அவரிடம் எந்தவித பகட்டும் இல்லாமல் அசல் மனிதராக இயல்பாக இருப்பதால்தான் மக்கள் அவரை மனதாரக் கொண்டாடுகிறார்கள் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்

அவரிடம் பந்தாவோ இல்லை - வித்யா பாலன்

ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் வித்யா பாலன், ரஜினிகாந்திடம் இருந்து கற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் ஏராளமான விஷயங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"அவரிடம் எந்தவித ஆடம்பரமோ, பந்தாவோ துளியும் கிடையாது, அவர் இயல்பாக வெளிப்படுத்துகிறார். அந்த உண்மையான மற்றும் அசலான குணம்தான் அவரை மக்கள் இவ்வளவு அதிகமாக நேசிப்பதற்குக் காரணம் என்று கூறினார்".

"அவருடன் நடிக்கும் போது எனக்கு எந்த அழுத்தமும் தோன்றவில்லை, ஒருவேளை உள்மனதில் லேசான படபடப்பு இருந்திருந்தாலும், அவரது எளிமையான அணுகுமுறை அதை முற்றிலுமாகப் போக்கிவிட்டது".

"நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள் அல்லது எடைபோடுகிறார்கள் என்ற உணர்வை அவர் ஒருபோதும் ஏற்படுத்த மாட்டார்".

"எப்போதுமே முகத்தில் புன்னகையுடனும், அனைவரையும் பாராட்டும் குணத்துடனும் அவர் இருப்பது நடிகர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நாளை வெளியாகிறது ஜெயிலர் 2

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா 'போதி கல்பாக்' என்ற கதாபாத்திரத்திலும், வித்யா பாலன் 'காந்தா கல்பாக்க்' என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் மிதுன் சக்கரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுராஜ் வெஞ்சாரமூடு, மிர்ணா, ஜதின் சர்னா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே களம் கண்டுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சுமார் ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT