தி கோட் பட டிக்கெட் முன்பதிவு; விஜய் மக்கள் இயக்க தலைமை அதிரடி உத்தரவு
நடிகர் விஜயின் தி கோட் பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது தி கோட் திரைப்படம். இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், படத்தின் நான்காவது பாடல் 'மட்ட' என்ற பெயரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, படத்தின் புரமோஷன்களில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் யாரும் டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவு வந்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் உத்தரவு
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், கோட் படம் குறித்த பேனர்களில் கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பேனர்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் யாரும் படத்தின் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என விஜய் மக்கள் இயக்கத் தலைமை கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக முதல் சில நாட்கள் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், இந்த முறை அது இருக்கக் கூடாது என விஜய் தரப்பில் விரும்புவதாகத் தெரிகிறது.