இந்த வார தமிழ் சினிமாவின் திரையரங்க வெளியீடுகள்- திரைக்கு வரும் 10 திரைப்படங்கள் எவை எவை?
இந்த வருடத்தின் கடைசி சில நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் 10 திரைப்படங்கள் வெளியாகயுள்ளன. கடந்த வாரம் வெளியிடப்பட வேண்டிய, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்படம் முதல், சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே திரைப்படம் வரை, இந்த வாரம் வெளியாக காத்திருக்கும் திரைப்படங்களின் தொகுப்பு. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது- எருமை சாணி யூடுப் சேனல் குடும்பத்தின், முதல் வெள்ளித்திரை படைப்பு இப்படம். பல வித்தியாசமான குணங்களைக் கொண்ட நபர்கள், மர்மமான திரையரங்குகள் சிக்கிக் கொள்ளும் போது, என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. படத்தில் பரிதாபங்கள் கோபி-சுதாகர், முனீஸ் காந்த், எரும சாணி ஹரிஜா, விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூட் நம்பர் 17
அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில் நடிகர் ஜித்தன் ரமேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். அஞ்சு பாண்டியா நாயகியாக நடிக்கும் நிலையில், ஹரீஷ் பேரடி, ஆகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்தியமங்கலம் காட்டுக்குள் டேட்டிங் செல்லும் காதல் ஜோடியை, பேயாக வரும் ஜித்தன் ரமேஷ் பழி வாங்குகிறார். எதற்காக பழி வாங்குகிறார், இறுதியில் அவர்கள் தப்பித்தார்களா என்பது படத்தின் மீதி கதை.
சரக்கு
லியோ திரைப்படம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான், ஜெயக்குமார் இயக்கத்தில் தயாரித்து நடிக்கும் திரைப்படம் சரக்கு. பொலிட்டிக்கல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில், எந்நேரமும் மது குடிக்கும் மது பிரியராக மன்சூர் அலிகான் வலம் வருகிறார். படத்தில், வலீனா, யோகிபாபு, கே. பாக்யராஜ், கே எஸ் ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நந்திவர்மன்
புதைந்து போன பழங்கால சாம்ராஜ்யத்தை கண்டுபிடிக்க தொல்லியல் குழு ஒன்று செஞ்சி அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்திற்கு வருகிறது. மூடநம்பிக்கையாளர்களான அந்த கிராம மக்கள் தொல்லியல் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக உயிரிழக்கும் நிலையில் அதை விசாரிக்க, ஹீரோவான சுரேஷ் ரவி அந்த கிராமத்திற்கு துணை காவல் ஆய்வாளராக வருகிறார். அவர் விசாரிப்பது படத்தின் மீதி கதை. ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், ஜேஎஸ்கே கோபி ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர்.
வட்டார வழக்கு
கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ள வட்டார வழக்கு திரைப்படத்திற்கு, மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ளார். கிராமத்தில் இரு பங்காளி வீட்டார் இடையே பல தலைமுறைகளாக நிலவும் பங்காளி சண்டை படத்தின் கதை. படத்தில் சில நடிகர்களை தவிர, அப்பகுதியை சேர்ந்தவர்கள் நடித்துள்ளது படத்திற்கு மிகப் பெரிய பலமாக கூறப்படுகிறது. இளையராஜா இசை- கிராமத்து சண்டை கதை- அதில் ஒரு காதல் என பல வருடங்களுக்கு பின்னர், இந்த காம்பினேஷனில் படம் வெளியாகிறது.
மதிமாறன்
வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன் மற்றும் பலர் நடித்துள்ள படம் மதிமாறன். இப்படத்தை மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார். இரட்டையர்களான வெங்கட் செங்குட்டுவன், இவானா ஆகியோரில், உயரம் குறைந்தவராக வெங்கட் செங்குட்டுவன் உள்ளார். அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் உருவ கேள்விகளால் பாதிக்கப்படும் அவருக்கு உறுதுணையாக அவரது தங்கை உள்ளார். இந்நிலையில், அவருக்கு ஏற்படும் காதல், அவரின் வாழ்க்கையை புரட்டி போடுவது படத்தின் மீது கதை.
யாவரும் வல்லவரே
என்.ஏ.ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள காமெடி திரில்லர் திரைப்படம் யாவரும் வல்லவரே. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை, 12 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை, கதை ஆக்கியுள்ளார் இயக்குனர். பிரச்சனைகள் ஏற்படும் போது, யாரோ ஒருவர் வந்து காப்பாற்றுவதற்காக நாம் காத்திருக்க வேண்டியது இல்லை என்கிறது படத்தின் மையக்கரு. இப்படத்தில் சம்பவங்களுக்கு தகுந்தார் போல், ஹீரோவாக மாறுகிறார்கள் படத்தின் கதாபாத்திரங்கள்.
பேய்க்கு கல்யாணம்
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக பேய்க்கு கல்யாணம் நடைபெற போகிறது, என தொடங்குகிறது படத்தின் டிரைலர். காதல் ஜோடிகள் திருமணம் நிச்சயக்கப்பட்ட பின் உயிரிழக்கின்றனர். அவர்கள் ஆத்மா சாந்தி அடையாமல் மீண்டும் பேயாக மாறி திருமணம் செய்து வைக்க வலியுறுத்துவது படத்தின் கதை. ராணிப்பேட்டை எஸ்.ராஜ்குமார் (அறிமுகம்) சர்மிஷா (அறிமுகம்) ராயக்கோட்டை மாதேஷ், சிவகாசி முருகேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்தை, சுச்சி ஈஸ்வர் இயக்கியுள்ளார்.
மூத்தகுடி
ரவி பார்கவன் இயக்கியுள்ள இப்படத்தில், பிரகாஷ் சந்திரா, தருண் கோபி, அன்விஷா, பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா, ஆர்.சுந்தர் ராஜன், சிங்கம்புலி மற்றும் ராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். 1970களில் மதுவால் பல உயிர்கள் பலியாகியதால் மூதக்குடியில் மதுக்கடை திறப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுக்கடை திறக்கப்படுமா அல்லது மது இல்லாத கிராமமாக மூத்தகுடி நீடிக்குமா என்பது படத்தின் கதை. படத்தில் 'மாயாண்டி குடும்பத்தினர்' பலர் இருப்பதால், அப்படத்தின் டச் இதிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மூன்றாம் மனிதன்
கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில், இயக்குனர் ராம் தேவ் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் மூன்றாம் மனிதன். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இதில், சோனியா அகர்வாலின் கணவர் படத்தின் தொடக்கத்தில் மாயமாகிறார். அவரைக் கண்டுபிடிக்கும் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் கே.பாக்யராஜ் நடித்துள்ளார். எந்த சாட்சியும் இல்லாமல் நடைபெறும் ஒரு கொலையை, பாக்கியராஜ் தன் திறமையால் கண்டறிவது படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
அன்னபூரணி- லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இப்படம், எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மிகப்பெரிய சமையல் கலை வல்லுநராக மாறுவதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் சமாளிப்பதை பற்றியது. படத்தில் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்ற இப்படம் ஆகா ஓடிடியில் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.
லைசன்ஸ்
விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் ராஜலட்சுமி, இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசும் இப்படத்தில், அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் ராஜலட்சுமி, துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பிப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. படத்தில், ராதாரவி, பழ கருப்பையா, அபி நட்சத்திர முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இப்படமும், டிசம்பர் 29ஆம் தேதி ஆகா ஓடிடியில் வெளியாகிறது.