மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய, தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அவர் மீது வழக்குப்பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் வெளியான லியோ படத்தில், மன்சூர் அலிகான் மற்றும் திரிஷா நடித்திருந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் திரிஷா குறித்து பாலியல் ரீதியாக சர்ச்சையான வகையில் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்துக்கு, தென்னிந்திய நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தன் கருத்துக்களை தெளிவுபடுத்திய மன்சூர் அலிகான், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்நிலையில், "இந்த சர்ச்சை குறித்து தனது மூத்த நிர்வாகிகளுடன் பேசி இருப்பதாக", நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பூ நேற்று தெரிவித்திருந்தார்.
அவதூறு கருத்துக்கள் குறித்து கவலை தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம்
இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து தலையிட்டுள்ள தேசிய மகளிர் ஆணையம், திரிஷாவிற்கு எதிரான மன்சூரின் அவதூறு கருத்துக்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேலும், மன்சூர் அலிகான் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 509B(மின்னணு முறையில் பாலியல் துன்புறுத்தல்) மற்றும் தொடர்புடைய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய கருத்துக்கள் பெண்கள் மீதான வன்முறையை சாதாரணமானதாக்குவதாகவும், அவை கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மகளிர் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறது.