இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்: கருணாஸ், த்ரிஷாவிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நடிகர் சங்கம்
நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் மீது தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததற்காக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட, அதிமுகவின் முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜுவுக்கு எதிராக, கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். 20 ஆண்டுகளுக்கு மேலாக, தென்னிந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் த்ரிஷா. அவரை பற்றி, ஏ.வி. ராஜு என்பவர் சில தினங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். த்ரிஷாவும் இது குறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என காட்டமாக அறிக்கை விட்டிருந்தார். அறிக்கை வெளியான சில மணிநேரத்திலேயே, தான் செய்தது தவறு என ஏ.வி. ராஜு ஒரு வீடியோவை வெளியிட்டார்.
நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
இந்த விவகாரத்தில் கருணாஸும் சென்னை காவல்துறை ஆணையரிடத்தில் புகாரளித்துள்ளார். இந்த நிலையில் தென்னிந்தியா நடிகர் சங்கம், திரையுலக கலைஞர்கள் குறித்து அவதூறாக பேசுயதை கடுமையாக கண்டித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தற்போது பொது வலைத்தளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ் குறித்து, கேட்பதற்கு கூசுகின்ற, ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்த்தரமான, வாக்கிர மனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய்க்கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது" "கவனம் ஈர்க்கவும், கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும் இத்தகைய செயல்கள் நடப்பது இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும். சட்டரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.