கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் நிலையில், தனுஷின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரம் காட்டும் படக்குழு
கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாவதற்கு ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த, தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் தன் காட்சிகளுக்கான டப்பிங் படங்களை மேற்கொண்டு வருவதாக, நடிகை பிரியங்கா மோகன் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நடிகர் தனுஷ், தான் இயக்கி நடித்துள்ள படத்தின் வேலைகளையும் அநேகம் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் ப்ரோமோஷன்கள் முடிந்ததும், இந்த திரைப்படத்தின் அப்டேட்கள் வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது